அக்னிப்பூ
(காட்சி 1)
பனிமலர் வேளை கனிமொழி ஒருவள்
சிலையென நடந்தாள் சிற்றிடை சுமந்து
சிற்றிடை மீது சிறுகுட மொன்று
பற்றுடன் அங்குப் பாங்காய் அமர
வளைகை யதனை வளைத்த தாங்கே.
குறுநடை யிடையே குறுக்கிடும் ஆடை
சறுசறு வென்று சத்தம் எழுப்பும்.
கால்வளை யோசை காலை வேளை
இதயத் தோடு இன்னிசை பாடும்.
வண்டேறும் பூவை வட்டத் தலையில்
கருநாகம் மூன்று கலந்தது போன்று
கருமலை மீது கட்டியது போல
நீண்ட கூந்தல் நெடுகப் பின்னி
அங்கும் இங்கும் அலையென, மலைமேல்
தாவித் தாவிக் குதித்தது நன்று.
கடலிடை திரியும் மீனினைப் போல
இடையிடை திரியும் இளைய மீனுக்கு
மைவிழி யோரம் கருமை இட்டு
உண்மை மீனாய் உருவம் காட்டி
பொட்டிடை யோரம் படபட வென்று
மின்மினி போல மினுத்த தாங்கு.
பறவையின் சிறகு பறப்பது போல
புனிதனைத் தேடும் புருவ வில்லோ
எட்டுத் திக்கும் எட்டிப் பிடிக்கும்.
புனிதன், அவளின் இனிய காதலன்.
தலையினில் கூரை கவித்தது போன்று
கருநிறக் கூந்தல் இருக்கும். ஆங்கே,
பொட்டுக்கு மேலே நெடிய வடுகு
கருமலை இடையே சிற்றோடை போல
கனிமொழி தலையில் பனியாறு ஓட
பிரியா முடியைப் பிரித்து வைத்து
பின்னலிடை சேர்த்து பின்னநடை நடந்தாள்.
காற்று பட்ட கருப்புத் தாவணி
உடலைத் தாண்டி உலகில் வந்து
கடலலை போலக் கனிமொழி மீது
தேசியக் கொடியெனத் தேகத்தில் பறந்தது.
எடுத்துச் செருக, எத்தன் போல
மீண்டும் வந்து மீட்டுச் செல்லும்.
புனிதன் வீட்டைப் பூங்கொடி கடக்க
மனமின்றி, தாமதித்து தினமதைச் செய்வாள்.
கால்வளை யோசை காலை வேளையில்
புனிதன் காதில் பூபாளம் பாடும்.
காதலி தூது காற்றினில் வரவே
புத்தொளி பெற்றுப் புறப்பட்டான் புனிதன்.
காளை யொன்று கட்டவிழ்த்தது போல
காலையில் புனிதன் காதலியைக் காண
சிலையாய் நடந்தான் சிற்றிடை தொடர்ந்து.
முரசு வாள்போல் முனைப்புள்ள கண்கள்
காதலியை நோக்கும் காலத்திற்கு முன்னே
நாதெலி முள்ளில் நிற்பதைப் போல
நாளு பக்கமும் நோட்டம் விடும்.
ஓடும் பேருந்திற்கு ஓடும் கால்கள்
அடிமேலடி வைத்து அடங்கி நடந்தது.
வீரத் திருமகன் வீற்றிருந்த நாட்டில்
தீரச் செயல்களில் தீவிரம் அடங்கி
தீவினை யொன்றே தீவட்டி போல
திரியின்றி எரியும் திருட்டுப் பழக்கம்
புனிதனிடம் மட்டும் புனையா திடுமோ?
பரந்த மார்பில் பரவிய முடியும்
கறந்த பாலைக் கலக்காது குடித்துக்
கட்டான உடலைக் கட்டுக்குள் வைத்தான்.
கட்டான மீசை கருப்பேறி, முகத்தில்
முற்றிய வீரம் முருக்கேறி நிற்கும்
கண்ணாடி போன்ற கண்ணங்கள் இரண்டும்
கட்டான உடலுக்குக் காட்சி அளிக்கும்.
சவரம் செய்தே சிவந்த கண்ணம்
நெஞ்சின் சுமையை நெடிது காட்டும்.
அறிஞர்க் குற்ற அகல நெற்றி
எழுத்தறி விலாமக்களில் உதித்த புனிதன்
எதிர்கால அறிஞன் என்றே சாற்ற
அழகிய முகத்தில் அகன்று இருக்கும்.
தாண்டவ மூர்த்தியின் தலையினைப் போல
கூடிய முடியும் கூட்டை எழுப்பும்.
ஒருகையில் சோப்பும் மறுகையில் பேஸ்ட்டும்
பல்லிடை துணிந்து பவனி வரவும்
முன்னிடை தொடர பின்னிடை நகர்ந்தது.
இனிய குயிலின் இசையின் வேகம்
தென்ற லாட்டும் தென்னங் கிளைகளில்
கின்கினி என்று கானம் எழுப்பும்.
முன்னதன் ஓசை பின்னது தொடரக்
கண்ணிமை நேரம் கனிமொழி காலில்
சிறுமுள் ஒன்று சிரித்தது கண்டு
அத்தான் என்று அமுதவாய் திறந்தாள்.
அத்தான் என்று அழைத்த குரலில்
அன்பு இருந்தது. ஆசை இருந்தது.
முள்தைத்த காலை மன்னவன் பிடிக்க
மயக்கம் வந்த கன்னிக்கு, காதலன்
புனிதன் கரமோ பூவென இருக்க
புனிதை காலில் புதைந்த முள்ளை
இனிமையாய்ப் பேசி இழுத்து விட்டான்.
புனிதனின் பேச்சில் புனைந்த கனிமொழி
முள்ளிழுத்த வலியும் மூளைக் கெட்டாது
புனிதன் மார்பில் முகத்தைச் சாய்த்து
கவலை இன்றி கிடப்பது போல
காதலன் கையுள் கனிமொழி இருந்தாள்.
முள்தைத்த காலில் முத்தம் கொடுத்து
முழுதாய் வலியை மூழ்க டித்தான்.
பக்கத்து மரத்தில் பச்சைக்கிளி இரண்டு
பழந்தமிழ் பேசி வழக்காடி நின்றன.
மக்கள் சமுதாயம் மாயும் நேரம்
சட்டத்தில் திருத்தம் சமமாய் வேண்டி,
இருகிளி ஆங்கு இருண்ட உலகை
எரிப்பது போல எதிரில் இருந்த
புனிதன் மனதைப் புனிதப் படுத்தியது.
புனிதன் நெஞ்சில் புதுமை புகுந்தது.
கனிமொழி கண்ணில் பனிவிழக் கண்டு
நெஞ்சில் பாரம் நெருக்குவது போல
புனிதன் நெஞ்சோ புரியாமல் தவித்தது.
கனிமொழி கொஞ்சம் பனிநீர் அடக்கி
அருகில் இருக்கும் அழகனைப் பார்த்தாள்.
கண்ணில் இரத்தம் கசிவது போல
நெஞ்சின் குமுறல் வாய்வழி வந்தது.
அத்தான் என்று அழகாய் அழைத்து
அழுது, சட்டையை அழுக்காய் ஆக்கி
பழுத்த சுமையைப் பசுமையாய் இறக்க
வழியது தெரியா விழித்தாள் மாது.
கட்டழகன் கைகள் கட்டவிழ்ந்து போயின.
கட்டளை இட்டான் கனிமொழி நோக்கி.
காவியக் காதலன் கவினுருகிக் கேட்க
எரித்த சுமைதனை எறிந்தாள் மாது.
இழைத்த கொடுமை எதுவெனச் சொல்வேன்.
அழைத்த உடனே அருகினில் வரவே
ஆசை எனக்கு, ஆயினும் தடைகள்
படையென வந்து இடையினைப் பிடித்து
கதவினுள் அடைத்த காவலில் வைத்தார்
இனவெறி பிடித்த எந்தையார் என்னை
எத்தனை கொடுமை எனையடைந் தாலும்
அத்தனையும் தூசு அத்தானுனை நினைப்பின்.
பிளவாது காதல் இளகாதே என்று
உறுதி யளித்து உருக்கினான் அவளை.
நெய்யில் வாசம் நெகிழாது போல
புனிதன் அன்பைப் புனிதமாய்ப் பெற்ற
மங்கை சொன்னாள், மடந்தை நீங்க
எந்தைக்கு நேரே உந்தை வந்து
மண்டி யிட்டு பெண்கேட் டாலும்
எந்தை யுனக்கு என்னைக் கொடுக்க
இசையேன் என்று இறுதியாய்ச் சொன்னார்.
காரணம் இன்றி கட்டளை பிறந்ததேன்.
கால தாமதமின்றி கரைப்பாய் என்றான்.
உங்கள் அழகில் உருகிய எந்தை
எங்கும் பரவும் உங்கள் பெயரைத்
தினம்தினம் சொல்லித் தித்திக்கப் பேசுவார்.
உங்களைப் புகழும் எந்தன் தந்தை
ஏற்க என்றும் ஏற்புடைத் தாரில்லை.
விளங்காத எதையும் விளம்பாதே என்றே
விலகாத அணங்கை வளைத்து, கனிமொழி
என்கண்ணே, பெட்டகமே, என்வாழ்வின் விளக்கே
காரணம் மறைக்காது கட்டவிழ் என்றான்.
சாதிகள் இங்கே சதிராட்ட மாடும்
வேதியர் குலத்து வேராம் நான்.
குடியிலே தாழ்ந்த குடியுன் குடியென்று
மதிமாறா எந்தை மிதித்தார் உங்களை.
பொறுக்கா மனமோ பொறுமை இழந்து
உங்களைப் பழித்த எந்தன் தந்தையை
உதறி விட்டு உங்களிடம் வருவேன்.
இம்முடிவு சரியென நும்மனை நாடினேன்.
நும்மனை என்று நம்மனை யாகுமென
நெஞ்சில் நுழைந்த கனிமொழி கேட்டாள்.
எந்தன் சாதி நுன்றன் சாதி
பிரிக்க வொருவர் பிறந்தா ரென்று
புரிந்தேன் இன்று. பகன்றாய் நன்று.
வேற்றுமைச் சாதி வேரிலை என்று
நாட்டை விட்டுத் துறத்தி விட்டு
நாளை நமதே, நவில்கிற நாளில்
சேர்வோம் நாமே, சோதனை நீக்கி.
எனக்காக என்றும் உறுதியாய் இருக்க
உரிமையில் சொல்லி, ஊக்க மளித்துப்
பொறுமையாய் இருந்தால் சேர்வது உறுதியெனப்
புனிதன், உயிரைப் புனைந்து அனுப்பினான்.
காதலனைப் பிரியா கனிமொழி கால்கள்
ஆற்றல் இழந்து அழுது நடந்தது.
சிந்தனை யிலாழ்ந்த சிற்பியைப் போல
புனிதன் மனமோ புதுயுகம் காண
புனிதை யவளைத் தனியே யனுப்பிச்
சினமாய் நெஞ்சில் சுமந்த கருவைப்
பிணமாய் ஆக்கப் புறப்பட்டான் புனிதன்.
(காட்சி 2)
சமூகக் கோணல் நேராய் ஆக்க
கமுகாய் நடந்தான் கனிமொழி காதலன்.
வழியில், சுகமாய் வாழும் இனங்கள்
தனக்கென ஒன்றை தமதாக் காது
நமக்கென வாழும், நெறிய பண்பில்
பறவை இனங்கள் பளிங்கு காட்டும்.
கனிமொழி விழியில் கசியா தவனாம்
புனிதன் சிந்தனை உலகை அளக்க
வழியில் சான்றோர் வருவதைக் கண்டு
வணங்கி நின்றான் வளமுடை புனிதன்.
பழமையில் ஊறிய பழுத்த மனங்கள்
பஞ்சாங் கமெனும் பாகை யுண்டு
நஞ்சான சிலதை அஞ்சாமல் செய்வர்.
அஞ்சா விழியெதிர் பஞ்சாங் கமெலாம்
துணிவொடு எதையும் துணையின்றி செய்யும்
தூய பாவலன், கனிமொழி காவலன்.
புனிதன் முன்னே புன்முறுவல் பூத்தனர்.
அறிவில் சிறந்த அறியாமை மிகுந்த
பொருளில் நிறைந்த பொறுமை குறைந்த
அருளில் மிக்க கருணை யில்லா
பூணூல் பூண்டு புதுமை துறந்த
பழமை போற்றும் பஞ்சாங்கத் தோடு
புகழேந்திரன் என்னும் புகழ்பெறா முதியோன்
கனிமொழி தந்தை ஒருவரும் இருந்தார்.
புனிதா, காலையில் புறப்பட்ட தெங்கே?
என்றார் முதியோர். என்றும் மனதில்
இளமை வழுவா புனிதன் சொன்னான்
காலையின் கடனைக் காலத்தொடு முடித்து
காவலன் இறைவன் காலடி வீழ்ந்து
நம்மனக் குறையை நயமுடன் சொல்லி
நல்வழி காட்ட நாடுவேன் என்றான்.
புனிதனின் மொழியைத் திண்றனர் பெரியோர்.
இறைவன் எமக்கே இறங்குவன் என்று
சிறைவைத் திருக்கும் பிரிவினைக் காரர்கள்
திரையுள் செய்தலே தீர்க்கம் என்றும்
இறைநெறி தழுவா இறையை நாடின்
புறவினை சேருமென பிதற்றினர் புனிதன்
முதியோரை எதிர்க்க மனமிலா புனிதன்
வாழையில் ஊசியை ஏற்றினார் போல
நரைமுது மனமும் கரையும் வண்ணம்
மறையோன் காணும் மறையினைச் சொன்னால்
மன்றாடி அவனிடம் மாண்பு பெறுவேன்
நகைத்தனர் பெரியோர், பகைத்தனர்அவன்மொழி.
கீழினச் சாதி இறைவனைக் காணல்
தகாதெனக் கூறி தகர்த்தனர் அவனை.
புகாத எதையும் புகுத்திடத் துடிக்கும்
புதுமை விரும்பும் புனிதனின் நெஞ்சோ
அழுக்கைத் துடைக்க வழுவா யினும்நான்
அழைக்க விரும்பு கின்றேன் என்றான்.
இயலாத எதையும் இயம்பா தென்றே
அயலார் மொழியை அழைக்கா பெரியோர்
தம்மொழி யொன்றே பழமொழி யென்று
சரியாய் நின்று சாற்றி நின்றார்.
மூத்தோர் மொழியும் மொழிகள் எல்லாம்
முதுசொல் லானால் முத்தியடையும் நாடு
என்றே மனதில் எண்ணிய புனிதன்
இளையோன் மொழியும் முதுமொழி யானதை
புரட்சிக் கவியாம் பாரதி கதையும்
ஆங்கிலக் கவியாம் ஷெல்லி கதையும்
அழகாய் செப்பினான் அருமறை எதிரே.
கரையா நெஞ்சு கலங்கவே இல்லை
மறையான வாழ்வில் மங்கிய நெஞ்சம்
சிறிதும் கரையா சிலையென இருந்தது.
இறைவனைக் காணும் இனியனைப் பாரு
மென்றே யவனை மாய்த்து வந்தார்.
புனிதன் மனமோ புண்பட வில்லை.
துணிந்து ஆங்கே தெளிந்த கேள்வி
புன்னையில் தாமரை பூத்தது போல
புண்பட்ட நெஞ்சைப் புனிதப் படுத்த
பண்பட்ட இனியன் பகர்ந்தான் நன்று.
இறைவன் எனக்கு இறங்கா னாயின்
இனியவன் பெயரை இயம்பேன் நானும்.
என்மனக் குறையை எரிக்காத இறைவன்
என்மனம் மட்டும் எரித்தவன் ஆவேன்.
தன்மானம் நாட்டைத் தாண்டும் போது
பெண்மானம் இங்கே பேயாய் மாறும்.
சாதியை ஒழிக்க, சாற்றுவன் இறங்கேல்
சட்டத்தின் முன்னே சாற்றுவேன் என்றும்
சட்டம் என்னைச் சாத்திய தென்றால்
சமுதாய மத்தியில் சாற்றுவேன் என்று
சொட்டும் பனிவேளை சொன்னான் புனிதன்.
புனிதன் மொழியைப் புகழேந்திரன் தடுத்து
இனிதிதை நடத்தின், இனியவள் என்மகள்
உன்மனம் போல உனக்கு அளிக்க
என்றும் தயங்கேன் என்றான் சுகமாய்.
புனிதன் காதில் புத்தேன் பாய்ந்து
புதுவெள்ளம் நெஞ்சில் பூவென விரிய
கனிவள நாட்டைக் கனவில் கண்டு
இனியதை முடியேல் இனியளைத் தொடேனென
நனிமிகு மொழியில் பனிமிகு வேளையில்
சுகமாய் மனதைச் சுதந்திர உலகில்
சுற்ற விட்டு, பற்றாய்ச் சொல்லி
நடந்தான் புனிதன். நிகழ்வை நினைத்து
பனிவேளைப் பணியைப் பாங்குடன் முடிக்க
பக்கத்து நண்பன் பாரதி வந்தான்.
(காட்சி 3)
வருக நண்பா, வரவு நலமா?
இத்துனை நாளாய் மறந்தினை எனையே
அம்மா அப்பா அனைவரும் நலமா?
என்றே வினவினான் எழில்மிகு புனிதன்.
உந்தன் அன்பு ஊறும் போது
காளான் செடியும் கிளைப்ப துண்டோ?
என்றே பகன்றான் இனிய பாரதி.
அழகிலும் அன்பிலும் பண்பிலும் சிறந்த
பழகியோர் தோறும் பாசம் வளர்க்கும்
பைந்தமிழ் பாடும் பசுமை நெஞ்சாள்
என்னுயிர் தங்கை எழில்மொழி, ஆங்கே
எப்படி இருக்கிறாள் என்றான் புனிதன்.
உன்புகழ் பரவும் உன்னத பூமியில்
கண்படு மென்று கனிமொழி காக்க
உன்புகழ் ஓங்க, ஊரிடை உந்தன்
அருள்மொழி யெல்லாம் அருள்வாள் நன்று.
உன்நினை வாலே எந்தன் வீட்டில்
உன்னுரு ஒன்று உயிருட னிருக்கும்.
வருவோ ரெல்லாம் விரைந்து வந்து
உன்னுரு கண்டு, ஊரினைக் கேட்பார்.
உன்புகழ் சொல்லி ஊரினைச் சொல்லா
என்னுடன் பிறந்த அண்ணன் என்பாள்.
கன்னிகள் எல்லாம் காணும் போது
கண்ணிமை மூடாது, கண்ணியத் தோடு
நெஞ்சம் விரும்பும் நேயர் எங்கே
தஞ்சம் கொள்ள தவிப்ப தாய்யவர்
உந்நினை வாலே உருகுகின்றார் நித்தம்.
கனிமொழி, நினைத்து கனிவொடு அவர்களை
இனிய மொழியில், இளமை நெஞ்சில்
பட்ட வடுவைப் பக்குவமாய் எடுத்து
உன்பணி தன்னைத் தன்பணி என்றே
கரமேல் ஏற்று காமப் பேயைக்
கரைக்குள் அடக்கி காத்து வருவாள்.
தாயிலா குறையே, தராது அவளைத்
தந்தையில் மிக்காய்க் காத்தவன் நீ-உன்
அன்பினில் சிறிதும் அழுக்கிலா கண்டே
பண்பில் வல்ல எழில்மொழி தன்னை
என்பின் தொடர எண்ணி வந்தேன்.
என்னினும் மிக்கோர் அன்பு செலுத்தோர்
யாருளார் என்றே, யோசிக்க வைத்தாய்.
சரிசரி, கனிமொழி தந்தை. ஏதோ
பணித்தாரே, இன்னும் பணியா ரிலையோ?
என்றே பகன்றான் எழில்மொழி கணவன்.
சாதி வெறியோ சாத்தனார் போல
உறுதியாய்ப் பிடித்து உழுது வந்தார்.
அவர்மனக் கல்லை அழகாய் இறக்க
நயமாய்ப் பேசி நாட்டிய போது
சட்டத்தில் திருத்தம் சாற்றுவா யானால்
சிந்தையில் திருத்தம் சிந்திக்கச் செய்வேன்
உன்மனம் கொண்ட கனிமொழி தன்னை
என்மனம் கொண்டு மணம்முடிப்பேன் என்றார்.
சட்டத்தில் திருத்தம் சரிசெய் வதெனில்
சட்டம் உந்தன் பையிலா உள்ளது
சட்டம் எங்கு இருந்தால் என்ன?
இயற்றுவ திங்கே மனிதன் தானே?
மனிதன் இயற்றினால் மத்தியில் ஏற்குமோ?
மத்தியில் உள்ளவன் மனிதன் தானே?
மனித னாயினும், புனித னென்று
பொன்மொழி கூற, பொன்னாய் அவரைத்
தலைவர் என்றே திகழ்ச் செய்தோம்.
ஆயினும் அவனா ருயிர்மனி தன்தான்
பேயெனப் பிடித்த பதவி யினாலே
மனிதனும், பேயாய் மாறி நின்று
தனக்கென உலகைத் தன்கைக் குள்ளே
அடக்கிக் கொண்டு ஆண்டு வந்தால்
மனித னெனஅவரை மதிப்பார் யாரே?
சட்டத்தில் திருத்தம் சரிசெய்ய வேண்டி
நிற்கும் போது, நீதிமன்ற மெனக்கு
நீதி வழங்கா நெறிதவறி போமோ?
நீதியில், பிறக்கும் நியாய மென்று
நீதி மன்றம் நீந்தினா யானால்
தூண்டில் கயிற்றைச் சரியாய்ச் செய்து
அரசியல் வாதியும், அருநெறி வாதியும்
தூண்டில் மீனாய்த் துடிக்க வைப்பர்.
தூண்டில் மீனாய்த் துடித்த போதும்
சாதி வெறியதைச் சாக டித்தே
சாவேன் நானும், சாற்றுவ துறுதி.
வரும்தேர் தலில்நானும் வேட்பாள ராக
நிற்ப துறுதி. நியமிப் பதுறுதி.
உறுதி, உறுதி. அறிவேன் நானும்
உன்னிடம் மக்கள் கொண்டிடும் அன்பை
எண்ணிச் சொல்ல எழுத்தே இல்லை.
அவரிடம் நீயும் அழகாய்ப் பழகி
அரிய திட்டம் அவ்வப் பொழுது
எளிய வாழ்விற் களித்து வருவதால்
உன்னை மறப்பார் உலகினில் இல்லார்.
கட்சித் தலைவர் காணும் போது
உன்னிடம் பாகாய் உருகுவ துண்டு.
நிச்சயம் உனக்கு அமைச்சர் பதவி
கிடைப்ப துறுதி, சாற்றுவ துறுதி.
அமைச்ச னாகி, ஆறாத நெஞ்சில்
சாற்றிய கொள்கை மாறா தென்றும்
கொண்டாய் என்றால், கொண்ட உள்ளம்
கொதிக்கா தென்றும், கோவையாய் உந்தன்
மலைபுகழ் தன்னை மணம்பரவச் செய்வார்.
குறுவாள் நெஞ்சைக் குறுக்கிட்ட போழ்தும்
பெறாது விடேன். பெற்றான் கொள்கை.
நனையா நெஞ்சை நனைய வைத்து
சுவைக்கும் போது சபித்தே னென்றால்
சபைக்கு நானும் சரியிலை என்று
சான்றோர் மொழியும் சரிக்கட்டும் என்னை
நண்பக லுணவை நம்முடன் இன்று
பகிரிந்த பின்னே, போவோம் நாமும்
பொதுப்பணி மன்றம் பொதிந்த இடத்தே.
உணவினை முடித்து உறவின னோடு
ஊருக் கப்பால் உறங்கும் இடத்தில்
பசுமை இடையே, தென்னை கிளைகள்
வேய்ந்த, அழகிய குடிலுக்குள் சென்றார்.
இன்சுவைப் பேச்சு இனித்த தாங்கு.
ஒருமரக் கிளைகள் ஒருங்கே வந்து
உறவு பேசி உலாவுதல் போல
இருமன மங்கு ஒருமன தோடு
உறவினில் சாரம் ஊற்றாய் ஓட
மறைவினில் பேசி மறைத்தனர் எதையோ?
(காட்சி 4)
ஒருநாள், புனிதன் தெருவினில் கூட்டம்
சூழக் கண்டு சுழன்றான் ஆங்கு.
இளம்பெண் ஒருவள் இனிய உயிரை
மாய்த்தது கண்டு, மேய்ந்தான் அவளை.
பெற்றோர் இசையா பெருந்தவ றொன்று
செய்த லாலே, சாய்த்தாள் உயிரை.
என்றே பலரும் எண்ணி வந்தனர்.
சாய்ந்த பூங்கொடி தாழ்ந்த சாதியென
வாழ்ந்தார் அவளை மொழிந்தார் ஆங்கே.
அவளின் கதையை அறிந்த போது
அறிவுடை புனிதனும் அலறி னானே.
சாய்ந்தவள், ஒருவனைக் காதல் செய்ததால்
காமுகத் தந்தை கடத்திச் சென்று
அவனுடன் சேர்ந்தால் அவன்சாதி மக்கள்
நமைவாழ இங்கே வைக்கார் என்றே
தடுத்தார். தடுத்தல் தழைக்காது போகவே
தலையறுத் திட்டான் தன்மகள் பாராது.
என்றது கேட்டு எரியும் தீயில்
எண்ணெய் ஊற்றி வளர்ப்பது போல
நெஞ்சிடை பாரம் சுமந்துக் கொண்டு
நஞ்சிடை புகுந்த நயவஞ் சகரைக்
காவலில் சேர்த்து, கவலை கொண்டான்.
நாவலில் வருவதோ நாட்டில் நடப்பதே
என்றெனக் காட்டியும் திருந்தா மக்கள்
தீவினை சுட்டும் ஒருசில நாவலைத்
தீவிர மாகத் தேர்ந்தெ டுத்து
நேர்பா தையென்று நிமிர்ந்து செல்வார்.
கழுத்துக் குக்கீழ் வாசற் படியிருந்தும்
குனியாது சென்றால் குறுகுவ தாரோ?
(காட்சி 5)
ஊரின் எல்லையில் உயிரிலா உடலொன்று
உற்றாரும் இன்றி பெற்றோரும் இன்றி
கற்றாழை இடையில் கிடப்ப தாக
பெற்ற மொழியால் பறந்தான் புனிதன்.
ஊரின மக்கள் ஊர்வனர் போல
சேர்ந்தனர் அங்கே, செய்தி அறிந்து.
கொலையுண்ட பெண்ணைக் கொல்லையில் காண
பதறி, கூடி பிதற்றும் நெஞ்சம்
வளைத்துக் கொண்டு விவரம் அறியா
வாய்மொழி பேசி, வம்பு அளந்து
காலம் போக்கும் கயவர் இடையே
கவலை யுடன் கலந்தான் புனிதன்.
அவளின் உடலோ அழகிழந் திருக்க
களையா உடையும் களைந்தி ருந்தும்
களையா மக்கள் களைத்தா தில்லை.
சீர்கொள் புனிதன் சீராய் ஆக்கி
காவலர் வரவை பார்த்தி ருந்தான்.
காவலர் வந்து காய்ந்த உடலைச்
சோதனை செய்து சொன்ன போது
ஊரினர் எல்லாம் ஊலையிட் டோடினர்.
புனிதன் மட்டும் பொறுமையாய் இருந்து
காவலன் சொல்லைக் கவினுருகக் கேட்டான்.
தாழ்ந்த சாதியில் தவழ்ந்த பெண்ணை
உயர்ந்த சாதியன், உயர்ந்த உள்ளம்
அவளின் கற்பை அணுக நினைத்தான்.
பெண்ணின் பெருமை கற்பி லன்றோ
பெண்ணதைக் காக்க எண்ணா தெல்லாம்
எண்ணிய வாறே ஏற்றுவாள் ஆங்கே.
போராடி அவளும் போர்வை இழந்து
உயிரை இழந்தாள், மானம் காத்தாள்.
மண்ணின் பெருமை மங்கா திருக்க
மணிகுடம் சூட்ட மணிமொழி இல்லை.
கற்பினைக் காக்க உயிரை இழந்தாள்.
வஞ்சியை வஞ்சிய வஞ்சகன் எவனென
வஞ்சியின் கையுள் வகையாய்ச் சிக்கிய
பணப்பை யொன்று பளிங்கு காட்டியது.
பளிங்குப் பைக்குள் குணப்பைக் குன்றாம்
உயர்ந்தவர் என்றே ஊலை இடும்
உருவம் ஒன்று உண்மை காட்டியது.
நிழலைக் கண்டு நெகிழ்ந்த புனிதன்
சினமீக் கொண்டு சீறினான் கழன்றான்.
(காட்சி 6)
வழியில் கனிமொழி வழிவிடா நின்றாள்.
கனிமொழி கண்ணில் கரைகாணும் நீரில்
புனிதன் மனமோ நீந்திய தாங்கு.
சீறிய நெஞ்சு சிற்றிடை கண்டும்
கலங்கா தவனாய்க் கடந்தான் அவளை.
அவனின் துணிவை அறிந்த அவளோ
அவனின் காலை அணைத்துப் பிடித்து
தடுத்தாள், அழுதாள், தடையினை விடுத்தாள்.
நகர்ந்தால் என்னுயிர் நகரும் என்றாள்.
புலியெனச் சீறிய புனிதன் முன்னே.
இனியவள் கூற, இனியவள் பேச்சே
உயிரின் மூச்சென உண்மையாய் நம்பி
உடலினைச் சாய்த்தான் உயிரின் மீது.
கடமை, நெஞ்சில் கட்டாயம் ஏற்ற
துணிவு வேண்டும், தெளிவு வேண்டுமெனப்
பணிந்து சொன்னாள் கனிமொழி நல்லாள்.
ஆத்திரக் காரனுக்கு புத்தி மட்டு
அறிவில் லாதவனுக்கு வாழ்வே மட்டு
என்பது போல, என்னுயிர் இன்று
அறியா செய்யும் அறிவின்மை கண்டு
அழிக்க வில்லை. அறிவிக்க வந்தேன்.
என்றனள் பாங்காய், அறிந்த பின்னும்
தவறு செய்யின், தெளியா தவனென
இழிப்பாய் என்னை, இழியும் நாட்டில்
என்றே
தெளிந்த புனிதன், தென்னவன் தோளை
மார்போடு சேர்த்து மணிவிழி முகத்தில்
மாரியெனப் பொழிந்தாள் மாண்புறு முத்தம்.
இனியவள் முத்தம் இன்ப மளிக்க
களியெனச் சாய்ந்தான் கனிமொழி மீது.
நிலையிலா மயக்கம் நிம்மதி கெடுக்கும்
நீதியிலா நாட்டில் நேர்மை ஒழியும்
பதியிலா வீட்டில் பசுமை யிலையெனக்
கனிமொழி கழன்றாள் நனிமொழி பேசி.
(காட்சி 7)
மேன்மை புனிதன், மனதிடை குறைகள்
நரைத்தது போல நடந்தன மெல்ல.
சிறுத்தை போல சீறிய போழ்தும்
சிற்றிடை கட்டளை சிதறிய ததனை
மனமிலா கால்கள் மலைகளைக் கடக்க
வழியில் கண்டதை விழிகளு மறியா
அருவியின் ஓசை செவியும் அறியா
தென்றலின் இன்பம் தேகம் உணரா
ஊரெலாம் புகழும் உயிராம் புனிதன்
ஊநிலை நினைத்து ஊழொளி போல
இவ்வயம் தனியாய் இப்படி நடந்தான்.
வரப்பில் கால்கள் வழக்கிடும் போது
பொன்னென மின்னி பொலிவுற நிற்கும்
கதிர்கள், அதற்குக் கட்டினைக் கொடுக்கும்.
உணர்வினைத் தூண்ட உன்னதப் புல்லும்
உண்மை மெய்யொடு உறவு பேசும்.
வழக்கிடும் அரங்கில் வாதிடும் வக்கில்
கதிர்கள் மீதும் கரைகள் மீதும்
தாவித் தாவித் தனிமொழி பேசி
புரியா மக்களில் பிரிந்து நிற்கும்.
புனிதன் கால்கள் பகர்ந்த வழக்கை
பகிர்ந்த தென்று போனான் தொடர்ந்து.
மெல்லிடை பேச்சும் மெல்லிசைக் காற்றும்
புண்ணிய அரங்கில் பூக்கும் கோலம்
எண்ணம் மீதில் ஏணிமே லேற
தண்மை குன்றிய, தாண்டவன் கிரீடமாம்
புன்னக வராளி புரிந்திடும் பாம்பு
பகையெனத் தீண்ட புனிதன் வீழ்ந்தான்.
புல்வெளி நண்பன் புனிதன் நிலையினைப்
புற்றினில் நுழையும் பாம்பைக் கண்டு
அறிந்ததும் செய்தான் தெரிந்த வைத்தியம்.
வைத்திய மங்கே பைத்திய மானதால்
நடுங்கிய நெஞ்சொடு நடந்தான் சுமையொடு.
நெற்கதிர் சுமக்கும் நெடுமுடி தோளில்
கருக்கதிர் விளைக்கும் கண்ணிய புனிதன்
தெருவொடு தோளில் தேரினில் வந்தான்.
கண்டவர் கண்கள் கண்ணிமை மூடா
நெஞ்சொடு இணைந்த நேயப் புனிதன்
தன்னிமை மூடி தண்மை வெம்பி
கடலில் நுரையைக் கக்கும் அலைபோல்
வாயில் வரவே, வதங்கினான் உடனே.
இதனைக் கண்டே இறங்கிய அவனை
ஆளுக் கொன்று அன்பால் செய்தார்.
ஆளிடை மீது பறந்தது செய்தி
ஊரெலாம் பரவி ஊரும் முன்னே
கானில் இருந்த கனிமொழி அறிந்து
காதலன் உயிரைக் கருத்தெனக் காக்க
கால்தடு மாற, கைவளை உடைய
காவல் தலைவன் காலடி சேர்ந்தாள்.
ஊரார் செய்யும் உதவிகள் நீக்கி
நெஞ்சிலா கொடுத்த நஞ்சிடு புழுவாய்த்
தானும் மாறி, தலைவன் மெய்யில்
புண்ணிட்ட இடத்தில், பதித்த வாயால்
வெம்பிய நஞ்சைப் பிரித்தாள் நங்கை.
கண்ட தந்தை கணிந்தா ரங்கே.
சிலதுளி நேரம் சோதனை நெஞ்சில்
கனிமொழி சுமக்க, கணிந்தாள் பின்னே.
கனிமொழி காதலன் கண்ணிமை திறந்து
நனிமொழி அன்பில் நனைந்தது கண்டு
தனிமொழி கூற பிணமொழி எழுந்தும்
பனிமொழி யெனவே பிணக்கம் கொண்டான்.
கனிமொழி வரவால், கவலை இழந்து
இனிய வளதென இருந்தால் எல்லாம்
களைந்தார் பின்னே கனிமொழி பேச.
(காட்சி 8)
கனிமொழி கைகளால் கவர்ந்த நாயகன்
தனிமொழி பேசும் தண்மை கண்களைச்
சுவையென ஊறும் சாற்றின் கிண்ணத்தைப்
புனிதன் வளைத்த புருவ வில்லை
பாண்டியன் சொத்தைப் பரிசமாய்ப் பெற்ற
பருவக் குமரி, பவளக் கொடி
நாவா லும்பதி, நாய கன்துதி
சினமொழி பேசா சித்திரப் பாவை
மதிமுகம் கொண்ட மாவிளம் நங்கை
கனிமொழி எழிலில் கவலை துறந்தான்.
படுக்கையில் புனிதன் படுத்திருந்த போதும்
அவனுயிர் நாமம் துதித்த போது
இருந்த வலியும் இல்லா தானது.
அவன்மொழி கண்டதும் அவன்மொழி நின்றது.
அவள்மொழி வந்ததும் அன்பு ததும்பியது.
மருமகள் வரவில் மாறிய புதல்வன்
நிலையினைக் கண்ட நேசத் தந்தை.
புனிதனை இந்தப் பூமிக்குத் தந்த
உயர்ந்த கொள்கை உயிராய்க் கொண்ட
உயர்திணை வாழ்வால் உயர்ந்து விளங்கும்
எளிய வாழ்வே ஏழையின் வாழ்வென
வசதி இருந்தும் வாழா தவனாய்
அசதி இல்லா வாழ்வை அமைத்த
உலகினுக் குகந்த உத்தமனைத் தந்த
கோபாலன் என்னும் கோயில் நாம்
தன்னுடல் தங்கி தர்மத் தாயாய்
விளங்கு மவரே, புனிதன் தந்தை.
கட்டைக் குரலில் கணமாய் மயிலை
மருமகள் என்ற மறுக்கா நெஞ்சதைக்
கனிமொழி கேட்டதும் கரைந்தா ளங்கே.
உன்னுயிர் பாரா உலகிடை திரிந்த
என்னுயிர் மைந்தனை எனக்கு அளித்த
அன்புப் பொழிலே, ஆயிரம் நன்றி.
புயலெனத் தந்தார் புனிதன் தந்தை.
இம்மொழி கேட்டதும் இருப்பிடம் தாங்கா
கனிமொழி, எழுந்து கண்ணீர் உதிர்த்தாள்.
தவறு என்ன தந்து விட்டேன்
கண்ணீர் வருவதன் காரணம் என்ன?
திகிலுடன் நின்று தீட்டினார் கேள்வி?
என்னுயிர் அவருயிர் என்று பிரிக்க
உங்கள் மனம் உணர்ந்ததே மாமா.
பாதி என்னிடம் பாதி அவரிடம்
இருப்ப தென்றே இதுவரை இருந்தோம்.
வாய்நிறை அழைத்த வாயே இன்று
பிரித்துப் பார்க்கில் பாவியென் செய்வேன்.
மதிப்பாய் என்னை மருமகள் என்றீர்
உள்ளம் குளிர்ந்தேன் உவகை கொண்டேன்.
அழைத்த தெல்லாம் அழிந்து போனால்
இவ்வுடல் எனக்கு இல்லை மாமா.
என்னுயிர் என்றோ எரிந்தது மாமா.
அவ்வுயில் பிடித்து ஆருயிர் தந்து
தன்னுயிர் போலத் தண்மை காத்து
இவ்வுடல் தன்னை இருக்க வைத்த
என்னுயிர் தாங்கியை எப்படி மாமா
பிரிக்க முடிந்தது. பகராய் மாமா.
சுயநலம் கருதி செய்த இதற்கு
நன்றி செலுத்தல் நேர்மை தானோ?
என்னுயிர் கணவன் என்றும் இருக்க
என்னுடல் போக்க எண்ணியது தவறோ?
என்னுடல் போயின் என்னுயிர் இங்கே
உன்மகன் உடலில் கலந்து இருக்கும்.
உங்கள் ஆதரவு உதவும் என்று
எங்கள் மனங்கள் எண்ணியது தவறு.
நிலவும் துயரில் நிலவு முகத்தில்
தேங்கிய குளத்தில் தேரை இழுக்க
கன்னம் மீதில் கண்ணீர்த் துளிகள்
கடல்நீர் பெருக கரைபுரண் டோடியது
தண்மை வெம்பி தாங்கா உடலில்
வியர்வைத் துளிகள் விழுந்த முத்தென
முகத்தில் பொலிய, முகத்தின் அழகை
இன்முகம் காட்டிய இனிய திலகம்
தந்த முத்தால் தகர்ந்து வீழ
சிவனின் கண்ணில் சிவப்பு ஓடை
கங்கை யென்றே கரைபுரண் டதுபோல்
மங்கை முகத்தில் காட்சி தந்தது.
ஆறால் நனைந்த ஆடை யெல்லாம்
வண்ணம் ஏந்தி வனப்பு காட்டின.
கைவிரல் பத்தும் கண்ணீர் கழுவ
கைவளை யெல்லாம் கழுவிய அழுக்கால்
ஒன்றாய்ச் சேர்ந்து ஓசை மறந்தது.
விரல்கள், தண்மை விரட்டிய தாலே
மெல்லிடை கைகள் மரத்துப் போயின.
இவையெலாம் கண்டு, இன்சுவை பேச்சில்
வல்லவ ரான வான்மகன் தந்தை
ஆறுதல் கூற ஆற்றிடும் மொழிகளை
வலையினை வீசி, வாழும் உலகில்
அலையின் துணைவன் அலைவது போல
கவலை தந்தை கலைந்து இருந்தார்.
கனிமொழித் தாயே, கனிவாய் என்று
நனிமொழி பேச நாவைத் தூண்டினார்.
உந்தன் அன்பின் உரத்தைக் காண
சின்ன சோதனை செய்தது தவறுதான்.
மன்னி யென்று மருமகள் முன்னே
கண்ணிய உடலைக் கண்ணீர் நனைக்க
இருகரம் குவித்து இருந்தா ரங்கே.
தலைவன் தந்தை தலைகுனியக் கண்டு
மலையாம் துயரம் மாற்றி, நெஞ்சில்
இலையெனக் கொண்டு இன்ப மொழியால்
மாமனார் அன்பை மாண்பாய்ப் பெற்று
தன்நிலை மாறி தண்மை கொண்டு
பன்நிலை யான புனிதன் தந்தையைத்
தன்நிலை காண தண்மொழி சொன்னாள்.
உறுதியான ஆதரவு உங்கள தென்று
இதுவரை கருதி இருந்து விட்டோம்
அவ்வுயிர் இன்று ஆற்றிய சொல்லால்
என்னை இழந்தேன், மன்னி என்று
மன்னவன் தந்தை காலடி வீழ்ந்தாள்.
துயரப் பேச்சின் திசையினைத் திருப்ப
திருவிழிப் புனிதன் திருவிளை யாடல்
கருவிழி நங்கையை விழிக்கச் செய்தது.
அம்மா, என்று அலறிய புனிதன்
கட்டிலில் இருந்து உருண்டான் கீழே.
துயரைத் தழுவிய தளர்ச்சி கனிமொழி
உணர்ச்சி வீழ, உணர்வு பெற்று
உயிரைத் தாங்கி உரமூட்ட நின்றாள்.
நனைந்த கைகள் நாயகன் முகத்தை
அன்பு மீதில் அணைத்தது கண்டு
விழித்த புனிதன் வியப்பைக் காட்டித்
துயரம் போக்கத் தாவிய தென்றான்.
அனைவரு மங்கே ஆனந்த மடைந்தார்.
கனிமொழி, என்றென் கவலை தீரும்
மருமகள், என்றுனை மாற்றுவ தெப்போ
சிறுமொழி போல சாற்றினா ரங்கே.
பெருவழி கண்ட புனிதன் தந்தை.
காலம் வருமெனக் கனிமொழி சொல்ல
ஞாலம் பொறுக்கா ஞாயிறே என்றார்
எந்தையின் முன்னே என்னுயிர் செய்த
சத்தியந் தன்னை சாதிக்கு முன்னே
சத்திய மாயுங்கள் சமமக ளாகேன்
என்று சொல்லி எழுந்தாள் பின்னே.
(காட்சி 9)
தேர்தல் வந்தது. தேர்வின் மேடையில்
புனிதன் நின்றான், புனித நெஞ்சில்
பதிந்த யெல்லாம் புனிதம் காக்க
புனிதன், அவனின் பணிக்கு நாமெல்லாம்
இனிய சம்மத விருந்து அளித்தே
கனிய வைப்போம் என்றா ரெல்லாம்.
நன்றி கூறிய நனிமிகு புனிதன்
பண்பாற் கலைஞன் பாராட்டும் வண்ணம்
பலப்பல எண்ணம் பகர்ந்தா னங்கே
நாளும் பொழுதும் நானாளும் போதும்
என்னை இமைபோல் காப்பவள் நீயே
பாரதத் தாயே பாரின் மகளே
வாழ்க வாழ்க வாழ்க என்றே
ஆரம்ப உரையை ஆற்றினான் புனிதன்.
அதற்கே ஆங்கோர் அலைபோல் கரகொலி
இசைத்தது கண்டு நகைத்த புனிதன்
தொடர்ந்தான் மேலும் தொடர்மொழி பேச.
வறுமை தன்னை விரைவில் விரட்டி
பொறுமை
தன்னை மனதினில் கொண்டு
சிறுமை தன்னை எரித்து விட்டு
பெருமை
தன்னை மதியா தவன்போல்
ஒருவழிப் பாடே ஒருவழிப் பாடென
இருவழிப் பாட்டை
தெருவினில் நிறுத்தி
கருத்தொரு மித்து கால மெல்லாம்
செறிவின்றி
வாழ்வோம் செந்தமிழ் நாட்டில்.
சாதிகள் பலப்பல பெருகின போது
சாதிச்
சண்டைகள் பெருகின நாட்டில்
நாதி யில்லா மக்கள் இனத்தில்
நாறிப்
போன சாதிப் பூசல்
மாடி வீட்டுக் காரர் எல்லாம்
சாடி
இங்கே சாற்றுவ தாலே
வாடிய மக்கள் அதனை ஏற்று
பாடி
இங்கே உலாவு கின்றார்.
மேலொரு சாதி கீழொரு சாதி
என்றொரு
சாதி படைத்தா னேஇங்கு
பாலொடு நீரைச் சேர்ப்பது போல
ஏழையன்
நெஞ்சில் விதைத்தா னேபின்
நாலொரு சாதி பொழுதொரு வண்ணம்
புழுதியில்
இங்குக் கலந்தா னேநாம்
மேலொடு சொன்ன வார்த்தைகள் எல்லாம்
மேலா
டையென்றே இனிதாய் போர்த்தோமே.
புலியின் தோலைப் போர்த்திய தெல்லாம்
புலியென
இதுவரை இருந்து விட்டோம்
பலியான மனங்கள் பொலிவான வாழ்வை
இழந்து வாடும்
இந்திய நாட்டில்
புலியின் உருவம் மனிதனும் ஏற்று
ஏழையின்
இரத்தம் குடிப்பான் இங்கு
வலியால் அவனும் துடிக்கும் போது
வெளியில்
எதையும் சொல்லா திருப்பான்.
ஏட்டில் சாதி எழுதி வைத்து
வழக்கில் அதைநீ விலக்கு என்றால்
அழைப்பில் உண்டோ அரசு இடத்தில்.
இழைப்பில் வைத்து இழைத்த சாதி
ஏழை நெஞ்சில் ஏராய் உழுது
வேறு என்னும் வேரை வைத்து
நீக்கு என்னும் நீரை வார்த்து
வளர்த்த பயிரை வளமாய் ஆக்க
மலரா திட்டம் மெதுவாய்ப் போடும்.
உதவா திட்டம் உதிரும் வரையில்
உதவா நாடு உறுதிஈ துறுதி.
என்றான் புனிதன் எட்டும் நோக்கி
பகலவன் கைகள் பகிரிந்த வகையால்
பலத்த ஓசை பாதை கண்டது.
மேடைப் பேச்சில் மேன்மைப் புனிதன்
வானைப் பார்த்தான் வானின் விளக்கு
வழக்கம் மாறி வழக்குத் தொடுத்து
இருளில் மூழ்கி இருண்டு இருந்தது.
தென்றல் காற்று தென்னையில் பட்டு
ஓங்கார வோசையை ஓலையில் எழுப்பி
ரீங்கா ரமிடும் ரீரிக் வண்டியில்
தாங்கா புழுக்கம் தகர்க்க வந்தது
தாழ்ந்த மேடையைத் தள்ளாட வைத்தது
புனிதன் பேச்சில் புதைந்த மனங்கள்
புயலெனக் காற்று, புழுதியைத் தூற்றினும்
இலையெனக் கருதி இருந்தார் ஆங்கே.
புயலினைத் தாக்கும் புயலெனப் பேச்சை
வயமாய் வீசி வாழ்ந்தா னாங்கே.
ஆலைத் தாங்கும் விழுதினைப் போல
புயலைத் தாங்கி புயலென நின்றான்.
அண்ணல் பெரியார் அண்ணா வாழ்ந்த
தண்மை யொன்றே வாழ்வெனும் நாட்டில்
பண்பை இழந்து, பாரில் இன்று
சொண்மை கெட்டு சோடை போனது.
அன்னார் சொன்ன பொன்மொழி தன்னை
இன்னார் சிறிதும் இணைந்திடா தாலே
கண்ணாய் இருந்த கண்மணி நாடு
பொன்னாய் விளைந்தும் பொலிவிழந் ததின்று
முத்தும் பவளமும் முத்தமிழ் நாட்டில்
சொத்தென இருந்து சுகத்தைத் தந்தது
அடிமை யானோம், அழித்தோம் சுகத்தை
பாடுகள் பலப்பல பட்டே பெற்றோம்
பாரத தேவியின் பார்வை சுதந்திரம்
சுதந்திரம், நாட்டில் சாற்றிய வுடனே
பதவிக் கிங்கே போட்டிகள் ஆயின.
கொடுமை இங்கே கோலாட்டம் போட
கொடியவர் வயிற்றில் கொழுப்பைச் சேர்த்தோம்.
விடிவெள்ளி நோக்கி விழித்த காலம்
விடுதலை பெற்று விட்டுப் போனது.
கொண்டதைக் கொடுக்கக் கொஞ்சம் நேரம்
கொடுத்ததை வாங்கக் கழியும் காலம்
உண்மையாய் வாழ உங்களில் என்னை
தேர்ந்து எடுப்பீர் தாயின் மகனை
என்றே ஆற்றி விட்டான் மேடையை.
(காட்சி 10)
தேர்தல் முடிந்தது, தேரினைப் போல
கார்கள் எல்லாம் கரைகட்டி நின்றன.
புனிதன் இருந்த புண்ணிய ஊரில்
திருவிழாக் கோலம் திருவீதி எல்லாம்
கைகள் தோறும் கைகொளா மாலை
கீழே வீழக் காத்து இருந்தும்
விடாது அதனை வாடாது பிடித்து
நடவா நடந்து, நடந்து வந்தார்.
பெரியவர் என்ற போர்வைச் சாளிகள்.
மனதால் உயரா மதிப்பிலா மனிதர்
உயர்ந்த புனிதன் உதவியை நாடி
காக்காய் பிடிக்க, கீழோன் கட்டிய
கனமாம் மாலை காசுக்கு வாங்கி
கரையா அழுக்கர் கலந்து வந்தார்
தன்னாட்சி என்னும் தன்மான மனதைப்
புண்படப் பேச புரியா புனிதன்
இன்முகத் தோடு இனியவை சொன்னான்.
காலையில் மாலை மாயனைப் போல
நாடிய சாளிகள் நீசித் திரும்பின.
பின்னர் வந்தார் பகிர்ந்த மனங்கள்
ஏழையன் என்னும் ஏழையின் பங்காளி.
நாலு முழக்கதர் நாலாய் மடித்து
இடுப்பினைச் சுற்றி இறுகக் கட்டி
இருமுழத் துண்டை இருகை பிடித்து
நாலு முழமேல் இருமுழம் சேர
நாணிக் குறுகி நானில மக்களும்
அன்பைத் தாங்கி அருகினில் வந்தார்.
அனைவரும் அமர்ந்து அறுசுவை உண்ண
வந்தவர் எல்லாம் வாயார வாழ்த்தி
இனிதுன் கடமை இனிய தாக
வாழ்த்தினோ மென்று வாழ்த்தி நின்றார்.
உங்களில் ஒருவனாய் உள்ளமதில் புகுந்து
எங்களின் பணிக்கு என்றும் உங்கள்
பொன்னாம் கரங்கள் பொலிவாய் வேண்டும்.
உங்களைக் கொண்டே உலகை ஆக்க
உங்களில் நானும் ஊறி வருவேன்.
என்றே அமுதாய் எடுத்துச் சொல்லி
வந்தவர் மெய்தனை வளைத்துப் பிடித்து
அன்புத் தோள்களை ஆரத் தழுவி
விடையினைத் தந்தான் வளமுடை புனிதன்.
புனிதன் கண்களில் புதுப்புனல் போல
தாயின் படமெதிர் தலைசாய்த் திருந்தான்.
மௌனம் கொஞ்சம் மாறிய தாலே
பினகல் சத்தம் புகுந்த தங்கு
தாயே, உந்தன் தயவினா லின்று
தரணிக் கொருவராய்த் தேர்ந்தெடுத் திருக்கிறார்.
தரணியர் என்னை தரம்கெட் டவரெனத்
தூற்றும் பழிக்குத் துணையென நிற்கா
தனியாய் என்னைக் காட்டச் செய்வாய்
என்றே, தன்மனம் எடுத்து அங்கு
பன்மனம் கொண்டு பகர்ந்து நின்றான்.
அன்புத் தோழன் அருகில் வந்து
மார்பொடு தழுவி முத்தம் தந்தான்.
தங்கை எழில்மொழி, தமையன் நெஞ்சில்
அன்புக் கண்ணீர் ஆறாய் ஊற்றிக்
குளத்தில் தேங்கும் கண்கள் போல
ஆனந்தக் களிப்பில் ஆறா திருந்தாள்.
புனிதன் நண்பன் பாரதி சொன்னான்
மந்திரி பதவி கொடுக்க உனக்குக்
கட்சியில் பேச்சு கேட்டது என்றான்.
மெல்லிசை வேளை மெல்லிடை வரவே
அத்துனை பேரும் அகன்றார் பின்னே
அழகு ராசா அலங்கா ரத்தொடு
அரங்கிடை நின்று ஆளுவதைக் கண்டு
கனிமொழி உள்ளம் காதலன் மெய்யில்
அங்கம் முழுதும் ஆராதனை செய்தது.
மகிழ்ச்சியால் பேச்சு மாய்ந்ததா லங்கு
மௌனத்தின் ஆட்சி மெதுவாய் நடந்தது.
(காட்சி 11)
சட்ட அமைச்சராய்ச் சட்ட சபையில்
இளைய மைந்தன் இனிய புனிதன்
தன்மைப் பெயரைத் தெளித்தா ரங்கே.
வானூர் பறவை வாழ்த்துப் பாட
கானூர் விலங்கு கர்ச்சனை செய்ய
சோலையூர் வண்டுகள் மெல்லிசை கூட்ட
புனிதமாம் கரையைப் புனர்நீர் கழுவ
பூவூர் தென்றல் புத்தொளி சேர்க்க
சாலையூர் மக்கள் சாற்றிய மொழிகள்
காதுகள் கேட்க, கனிமொழி இனித்தன.
வாழ்க புனிதன் வாழ்க வென்றே
இனிய தமிழில் இசைத்தா ரங்கே
பகலிர வுணர்த்தும் புகழுடை ஒளிகள்
நகர்ந்திட மறந்து மயங்கி இருந்தன.
இளைய சமூகமிங் கியங்குவ தறிய
தலையாய்ச் செயல்கள் தயங்கி நடந்தன.
நாடே மயங்கித் தூங்கும் போது
செந்நெறி அமைச்சன் செந்தமிழ் மொழியில்
சீறிய திட்டம் சாற்றினா னங்கே.
(காட்சி 12)
இருமொழிக் கொள்கை இந்தியா விலின்று
அரசியல் சட்டம் ஆகு மென்றும்
அடிமைப் பேச்சை அடியோ டொழிக்க
அடிமை முறையை அகற்று மென்றும்
அடிப்படைக் கல்வி அனைவரும் பெறவே
கட்டாயக் கல்வி கட்டளை பிறக்கும்.
மொழியால் சாதி, இனத்தால் சாதி
வேரோ டொழித்து இந்தியச் சாதி
என்றெனும் ஒருசாதி யெங்கும் நிலவ
சாதி யிலையென இந்தியன் என்றும்
பணமாள் வேந்தர் பண்பாள் வதற்கு
மிஞ்சிய வருவாய் மற்றவர்க் குமென
அடிப்படை ஊதியம் அனைவரும் பெறவே
அருஞ்செயல் வழிகள் ஆக்கிய தென்றும்
ஊக்கமு டையாரெலாம் ஊதியக் காரரெனவும்
கைவினை மக்களும் கற்பிக்கும் மக்களும்
கட்டாய ஓய்வில் கருத்துரை யாட
கருத்தரங் கங்கங் கமைக்கு மென்றும்
ஐந்து வயதே பெற்றோர் பிள்ளையென்றும்
பின்னர் அரசுடை பேரன் என்றும்
அவரவர்க் குடைபணி அறிந்தளிக்கு மென்றும்
கூட்டு உழவே குடியை உயர்த்தும்
என்பதை உணர்ந்த எளிய அமைச்சன்
எண்ணிய செயலை எடுத்துக் காட்ட
பத்துத் திட்டமும் பத்தினைப் பூண
அத்தனை மனமும் ஆதரிக்கும் வகையில்
புத்தாண்டு வாழ்த்தில் புதுமுறைத் திட்டம்
அமலில் ஆக்க ஆயவழி செய்தான்.
(காட்சி 13)
கனிமொழி தலைவன் கணித்த செயல்கள்
நனிமிகு பெற்ற நயந்திடும் நாட்டில்
தினம்வரும் தென்றல் தீந்தேன் புகுந்து
கனபொழு தங்கு கடத்திய பின்னே
தன்பணி மறந்த தயக்கத் தாலே
பன்பிணி போக்க பாரத நாட்டில்
அன்பருட னாட ஆசை கொண்டு
இன்முகம் காட்டி இனித்தன நன்று.
இனிய தென்றலை உணர்ந்திடும் மனங்கள்
கனிமொழி உளமதைக் கவர்ந்த நாயகன்
பெயரைச் சொல்லி பரப்பினர் புகழை
தன்மனக் காவலன், தரணியர் போற்ற
தாயக மண்ணின் தியாகப் பண்பை
எண்ணி வியந்து களித்து இருந்தாள்.
(காட்சி 14)
வான்பூ மாலை வான்மகன் கழுத்தில்
வானவர் போற்ற வணங்கி இருந்தது
தென்றலால் பாடும் தென்குயில் ஓசை
மந்திர யோசையால் மயங்கிப் போனது.
பந்தலிடை பேச்சே மேளமாய் ஆனது
பன்சுவை உணவும் இன்சுவைப் பேச்சில்
தன்சுவை இழந்து தமிழ்ச்சுவை யானது
கண்பார் பொருள்கள் கனிமொழி தலைவன்
நனிமிகு பிம்பம் கனிமொழி வனப்பில்
புதைந்தது போல புனிதன் இருந்தான்.
ஆசிகள் ஆயிரம் அருந்தமிழ் மொழியில்
அருளிய மனங்கள் ஆனந்தம் கொள்ள
பெற்ற மனங்கள் பெருமை கொள்ள
மங்கை கழுத்தில் மாங்கல்யம் தந்தான்
பங்க மற்ற வேளையில்
நெஞ்சுரம் மிக்க நேர்மை புனிதன்.
(முற்றும்)
Comments
Post a Comment