பூட்டாதிருக்கும் வாசல் (கவிக்கதை)

 முதுபெரும் தமிழ்ச்சொல்லை விடையில் ஏற்றி

இடையில் விட்டுத் தவிப்பதைப் போலென்

காதல் கதையில் முகவுரை எழுதுமுன்

முடிவுரை எழுதிய கதையினை, இனியகதைக்

கவிதை வடிவினில் செப்பிட வந்துள்ளேன்.

 

இருபத்து வயதில் நயமாய் பெற்றேன்

நாடுபோற்றும் மாநிலக் கல்லூரி தன்னில்

இளமறிவியல் என்றொரு பட்டம், அன்றோ

விளம்பிட ஒன்றும் மனதினில் இல்லை.

பெற்றதொரு பட்டம், பெறவொரு பட்டம்

பச்சையப்பன் தன்னில், முதுகலை தமிழில்

முழுதாகக் கற்க முழுமனம் கொண்டு

முழுநீளத் தாளில் விண்ணப்பம் செய்தேன்.

முன்னவர் அதனை மனமுடன் ஏற்று

மறுநாள் தபாலில் அழைப்பு விடுத்தார்.

அன்றே சேர்ந்தேன், அழகுடன் பயில

அன்றும் இல்லை மனதினில் ஒன்றும்.

கல்லூரி நாளில் கலைபயில வந்தேன்

கலையில் ஆர்வம் என்னினும் மிக்கோர்

என்னுடன் பயில, மனமகிழ் வுற்றேன்.

தெள்ளுதமிழ் பயின்ற ஆசிரியன் இடையில்

ஒருசிறு துரும்பாய் உலவிட்டு வந்தேன்.

உவகை கொண்டேன் மனதளவில் நானே.

நண்பன் இல்லில் ஒருமாதம் தங்கி

முறையாக சென்றேன் முதுகலை  பயில

பலநாள் கழித்து விடுதியின் விண்ணப்பம்

அரசினர்  கண்ணில்  தழுவ நின்று

பற்றுத லோடு எடுத்து வைத்தார்.

எனக்கென ஓர்இடம் சீர்மிகு விடுதியில்

ஒதுக்கிடக் கண்டு மிகவே மகிழ்ந்தேன்.

மறுநாள் அங்குக் காப்பாளர் முன்னே

மறுமொழி பேசா மானிடன் போல

உருவழியா சிலையென நின்று, பழகுதமிழில்

அவருடன் பேசி அன்றே சேர்ந்தேன்.

அன்றும் இல்லை மனதினில் ஒன்றும்.

அன்றிரவுப் பொழுது விடுதியின் அமைப்பு

கவியரங்கம் ஒன்றை அமைத்தது நன்று

கவிதை படித்தேன், கவினுருகக் கண்டேன்

என்னுள்ளம் பொங்க எழுதாத வரிகள்

இடையினில் சேர்த்து இடைபிடிக்க வைத்தேன்.

கடைசியில் எனக்கோர் மிக்க கரவொலி

அதனினும் தனியாய் அழகிய சிரிப்பொலி

என்மனக் கல்லை நகர்த்தி வைத்தது.

விடியலில் எழுந்து குளியலை முடித்து

இறைவனைப் பணிந்து, உண்ட பின்னே

கல்லூரி வந்து கலையெனும் அலைக்குள்

என்மனப் படகை துடுப்பின்றி விட்டு

துடுப்பின்றி அலையும் படகினைப் போல

படிப்பின்றி அலைந்தேன். தனியாய் நானும்.

படிபடி என்று நூலகம் அன்று

தடிதடி யெனப்பல நூலினைக் கொடுத்து

விழிவிழி என்றென அறிவுரை சொல்லி

தனிமையை அதுவே போக்கின தன்று

மாலை நேரம் தட்டச்சில் ஒழிய

மற்ற நேரம் படிப்பினை மூழ்கும்

மற்றவர் எவரையும் அறியா தவனாய்

தனிமனிதன் என்றொரு கட்டளைக் குள்ளானேன்.

இரவுமணி ஒன்பதானதும் படுக்கை விரிப்பேன்.

இதுவே எனது பழக்கமென வழக்கமானது.

என்னைச் சுற்றி ஆயிரம் கண்கள்

பன்னாள் கண்டு தெரித்தன போலும்

சின்னாளில் எனக்குத் தெரிந்தன அதுவே.

பண்பில் தெளிந்த நண்பன் ஒருவன்

பாங்காய் உரைத்தான் பல்லவி போல,

அன்றும் இல்லை மனதினில் ஒன்றும்.

சிறுஇடை நங்கை யொருவள், தன்னின்

குறுவாய் திறந்து ரமாரமா என்றாள்.

ராம மந்திரம் காதினில் கேட்க

ராம பக்தர் கரமெழுப்புவது போல

ரமா என்றெனும் பெயரைக் கேட்டதும்

என்மன நினைவு பழமையைத் தேடி

ஆடியில் பட்ட ஒளியெனத் திரும்பி

குறுவாய் அழைத்த திசையினை நோக்கி

என்மனம் செல்ல, எதிர்வீட்டுக் கதவு

இமையெனத் திறந்து இருவிழி தன்னைத்

தெருவினில் வீச, அருகினில் நின்ற

தோழியைக் கண்டு சிரித்தாள் நன்கு.

சிரிப்பதை, நன்கு கவனித்த என்னை

பெருவிழி கொண்டு பார்த்தாள் அன்று.

வெய்யில் பட்ட நெய்யினைப் போல

என்கண் பட்டு உருகினாள் அங்கே.

அதுதான் எந்தன் முதல் பார்ப்பு.

அம்முகம் கண்டு வியந்தேன் அன்று

ஆம்,

முன்னொரு நாளில் முழுஇரவு தன்னில்

முழுமதி போல எதிரில் வந்து

அத்தான் அத்தான் அத்தான் என்று

அழகாய் மும்முறை அழைத்து விட்டு

மனதில் ஆழமாய் பதிய வைத்து

கனவு போல மறைந்து சென்றாள்.

மறைந்த பெண்ணாள் இன்றென் எதிரில்

பாண்டியன் சொத்தைத் தெருவினில் வீசி

அலுப்பில் லாமல் செல்வதைக் கண்டு

என்மனம்,

நிலையில்லா அலையாய் அலைந்தது நன்று.

என்கனவுக் கன்னியைக் கண்ட தாலே

என்மன மன்று தூங்கிட வில்லை.

அவளுடன் பேச என்மனம் துள்ள

எனையும் அறியாத துள்ளல் ஒன்று

என்மனத் திடையே சுழன்றன நன்று.

பலநாள் முயற்சி பயன்விளைவது போல

சிலநாள் முயற்சி பசுமை யாச்சு.

எங்கள் விழிகள் நான்கு ஆனாலும்

சந்திக்கும் போது இரண்டென ஆகும்.

பலநாள் இப்படி எங்களின் சந்திப்பு

வீதியிடை இடையே நடந்தன போலும்.

ஒருநாள் அவளை பேருந்தில் கண்டு

மறுநாள் தன்னில் கொடுத்தேன் மடலை.

பாங்காய் அதனை மார்போடு அணைத்து

பங்கு கேட்டாள் மனத்திடை நின்று.

பொன்னாள் அந்நாள் என்னாள் என்றே

பொங்கும் பொங்கல் அந்நாள் தன்னில்

என்மனப் பொங்கல் பொங்கின நன்றே.

அந்நாள் தன்னில் காதல் கருவினை

மனதில் நிறுத்தி புதுப்பாலம் அமைத்தேன்.

கல்லூரி நாளில் பலநாள் சந்தித்து

என்மன எல்லையைக் கோடிட்டு விட்டேன்.

மனங்களின் அலைகள் மனதோடு தடுத்தன

இதழ்களின் விடைகள் இதழோடு நின்றன

ஓருயிராய் ஈருடலாய் இருப்போம் என்று

ஒருமூச் சோடு சபதம் செய்தோம்.

எங்கள் காதல் நிலாவாவதை எண்ணி

உங்கள் முன்னே வைக்கிறேன்.  விடியுமுன்

விடிந்தால் என்வாழ்வு விடியட்டும். இல்லை,

என்பதை இதோடு செத்து மடியட்டும்.

அவளை எண்ணி என்ம துள்ளே

ஆயிரம் எண்ணம் சுழல்வதை இன்று

கவியால் தொடுத்துத் தாளில் வைப்பேன்.

என்னகம் கூறும் கலம்பகந் தன்னை

அவள்கூந்தல், தழுவ நின்றிடும் நாளில்

என்மனப் புயல்ஓய் வென்று நிற்கும்.

அதுவரை, என்மனம் தனியாய் இருக்கும்.

எத்துனை பிளவு மனதுள் நேர்ந்தால்

இத்துனை தூரம் விலகிச் செல்வாள்?

ஒருநாள் அவளை தனிமையில் கண்டேன்

அருகே சென்றேன் விண்ணகம் சென்றாள்.

அங்கே கண்டேன் அம்மா நின்றாள்

காவல் அதிகம் இருப்பதைக் கண்டு

நாவால் குழைய நகைமொழி பேசா

நான்தமிழன், என்றெனத் திரும்பி வந்தேன்.

சிந்தித்துப் பார்த்தேன், விளங்க வில்லை.

சிதைந்து போன எந்தன் மனதினுக்கு.

அவளுடன் பழக நான்பட்ட துன்பம்

அவளுடன் பழகி நான்பட்ட இன்னல்

அவளுடன் சேர்ந்து நான்கண்ட இன்பம்

அவளைப் பிரிந்து நான்படும் தொல்லை

எண்ணிக்கையும் இல்லை, எண்ணவும் இல்லை.

தொல்லையின் எல்லையைக் கடந்து வந்தேன்

பழகிய வகைதனை நினைத்துப் பார்க்கிறேன்.

பசுமை நினைவுகள் நெருப்பிலிட்ட பஞ்சாகுமோ?

வறுமை நிலைதனை வளமாக்க செய்திடலாம்

வளர்ந்துவிட்ட காதலை அழித்திடல் ஆகுமோ?

கல்லில் வடித்த சிலைதான் அழியுமோ?

அழியு மாயின், நாமெலாம் போற்றும்

இறைவன் நினைவு நினைவில் இருமோ?

சாலையில் பயிரிட்டால் விளைந்திடுமோ?

என்நெஞ்சில்,

அவள்நினை வன்றி வேறொன்று புகுந்திடுமோ?

அவளைக் கண்ட நாள்முதலாய் அவள்நினைவு

அவளை நினையாத நாழியொன்றும் இல்லை.

புத்தகம் கையிலே புத்தியோ வெளியிலே

படிப்பது நூலினை, பதிவது புதுவினை.

இப்படி,

இருநாள் தேடி அலைந்த தென்கண்கள்

பாலையில் வெள்ளம் புகுந்தது போலென்

சிந்தையில் தோன்றிய அணங்கள் அன்று

சிரித்து விளையாடி மகிழ்ந்து இருந்தாள்.

என்னை அணைக்கும் கையிடுக்கில், சிறுகிளியொன்று

பசுமொழி பேசிஇரு காலினை இருகைநோக்கி

அள்ளும் முறைபோல் துள்ளும் அதனை

ஒருவிரல்  பிடித்து மறுவிரல் நழுவ

திறுதிறு வென்று முழித்தது அப்போது,

என்விழி அணங்கு தன்விழி திறந்து

மண்ணைப் பார்ப்பதென்று என்னைப் பார்த்தாள்.

கண்ணைப் பார்த்தாள், விண்ணைப் பார்த்தாள்

அவளிதழ் விரிய என்னிதயம் விரிந்தது.

அவளின் பார்வை அதனுள் புகுந்து

ஆயிரம் கிளிர்ச்சியை மனதுள் எழுப்பி

பாயிரம் பாட கருவினைத் தந்தது.

எத்தனை மொழிகள் அந்தப் பார்வைக்குள்

என்னென்ன செய்தன எந்தன் சிந்தைக்குள்

கந்தனை வேண்டி காப்பாய் என்றேன்.

அந்தச் சிரிப்பே சிந்தையில் பதிய

படிப்பதை விட்டேன் பதியைத் தேடினேன்.

அவ்வப் பொழுது மின்னலென வந்தாள்

முத்தைக் காட்டி, அள்ளும் முன்னே

சிட்டென்று பறந்து சென்றாள்.

இப்படியே எங்கள் தொடக்க மானது.

ஒருநாள், விரலில் சிறுகட்டு போட்டு

சிறுநடை நடந்து வருவதைக் கண்டேன்.

துன்ப மதை தாங்கா என்மனது

துடியாய்த் துடித்து துரும்பாய் போனேன்.

குருதி யெல்லாம் கொட்டியது போல

கண்வெளுத்து, அவளிடம் கேட்டேன்.

ஒன்றுமிலை சிறுவெட்டென்று சமிக்ஞை செய்தாள்.

அவளின் பதிலைக் கேட்ட உடனே

அவனியில் என்னை மறந்து நின்றேன்.

அந்த மாயப்பேச்சில், ஆயிரம் மொழிகள்

அந்தரங்கமாய் உலவுவதை உள்ளம் உணர்ந்தது.

இப்படியே எங்கள் காதல் தேரினை

இருவாரம் நிம்மதியாய் ஓட்டிச் சென்றோம்.

விடுமுறை நாளில் எங்கள் காதல்

சிறகினைக் கட்டி பறந்தன மனதில்.

கண்க ளல்லோ காதலின் தூது

பெண்க ளன்றோ அதனின் கூடு

கண்ணால் வளர்ந்த அன்பை, எந்தன்

மனதுள் ஏற்றுக் காவியம் அமைத்தேன்.

எந்தன் காவியத்துள் நாயகி யாக்க

காவியக் காவலனாய் இருப்பேன் என்று

காதல் கடிதம் எழுதினேன் நன்று.

விடுமுறை நாளும் தீர்ந்து போனது

கைவிரல் தீண்டும் நாளும் வந்தது

ஆம்,

கல்லூரி திறந்து விட்டார்கள், எங்களின்

மனக்கதவும் தாழின்றி திறந்துக் கொண்டது.

அன்று,

ஞாயிறு தவறாமல் தன்பணி செய்திட

தாமரை அதனெதிர் தன்னெழில் காட்டிட

சோலை தோறும் பூக்கள் மணத்திட

ஆலயம் தோறும் அருள்மொழி ஓதிட

ஆயர் குலத்தில் ஆஒலி இசைத்திட

காலைக் கதிரவன் வான்மீது வந்தான்.

பால்நில வன்று பகலில் கண்டு

தேன்நில வைப்பாடும் நாவினில், அன்று

கும்மி அடித்தது கும்மாளம் போட்டது.

என்றும் இல்லாத மகிழ்ச்சி தன்னை

உள்ள மதனை ஆட்சி கொண்டது.

கண்ணில் வெள்ளம் கரையென நிற்க

மனதில் எண்ணம் மலையெனக் குவிய

மங்கை நல்லாள் பூவெழில் நோக்கி

புதுப்பாதை மீதில் புதுவண்ணம் தீட்டிக்

காவலன் போலக் காத்து இருந்தேன்.

பேருந்து தன்னை நிறுத்தும் இடத்தில்

காலை மணி எட்டரை யானது.

காதல் நாயகி வரவினை நோக்கி

காத்த என்கண்கள் பூத்தது நன்று.

கல்லூரி செல்லும் பேருந்து வந்தது

காலை நிலவு அதனில் ஏறயென்

கால்விரி கோலம் அழிந்திட, நானோ

வாடிய முகமாய் வதங்கிப் போனேன்.

ஏறிய யென்கண்மணி, என்னைக் கண்டு

இறங்க முடியாமல் தவித்தாள் அங்கு.

நாளை பார்ப்போம் என்று சொல்லி

கைவிரல் தன்னில் விடைபெயர்த்துச் சென்றாள்.

என்மன மன்று தூங்கிட வில்லை

தவறினைச் செய்த நல்லவனைப் போல

தவியாய்த் தவித்தேன் தரைமீது நின்று.

மாலை அவளை மாடியில் கண்டு

மேலை நாட்டுச் சொத்தினை என்னில்

பளிச்சிடக் கண்டு மயங்கினாள் பெண்டு.

நாளை காலை காணும் நேரம்

மௌன மொழியில் சொல்லிச் சென்றாள்.

சொன்ன நேரம் மறுநாள் அங்கு

குறித்த இடத்தில் நின்றேன் பாங்காய்

குறித்த நேரம் ஆமையென நகர்ந்தது

என்று வந்தது இந்த நிலவு

பூமிக்கு என்று எண்ணிய போழ்து

செந்தாமரை முகத்தில் வெண்தாமரை காட்டி

அருகினில் வந்தாள், அருகே நின்றாள்.

என்செய்வது என்பேசுவது என்னென்று புரியாமல்

சிலையென நின்றேன் சிலதுளி நேரம்

நின்பெயர் ரமாதானே என்றெனக் கேட்டு

என்பெயர் சொல்லி மௌனமாய் நின்றேன்

ஆமென்று மறுமொழி கூறி பக்கம் நின்றாள்.

அவள் செல்லும் பேருந்து வந்திட

கொடியில் மலர்ந்த மலரொன்றைக்

கொடியவன் ஒருவனின் கைவிரல் பறித்திட

கொடியினைப் பிரிய மனமில் லாமலர்

சிறிது நேரத்தில் வாடுவது போல

என்மனமும் முகமும் பேருந்தைக் கண்டு

வெறுப்பென நின்றேன். பேருந்தின் படிகளில்

பஞ்செனும் பாதம் பதிவதைக் கண்டு

தஞ்சமான நெஞ்சு சஞ்ஞல மானது.

சீறிவந்த பேருந்தில் என்னன்னம் வீற்றிட

அன்னமென நகர்ந்தது. விடைபெற்றுச் சென்றது.

மாலை வந்தது, மௌனமொழி பேச்சு

மெருகாய் அமைந்தது. மனதை வளர்த்தது.

என்மனம் கொண்ட காதல் வகைதனைத்

தன்மானம் கொண்ட எழுதுகோல் மூலம்

வெண்ணிறம் கொண்ட தாளின் மேலே

வெண்ணிலவு அதனைப் பார்த்திட, நானோ

வெண்மனம் கொண்டு வடித்தேன் கவிதை.

அக்கவிதை, இங்குக் கோடிடல்

நலமெனக் கருதி நகல் வைக்கிறேன்.

புத்தகச் சுடரே சிந்தனை மலரே

பூவின் இதழே அன்பின் உருவே

பண்பின் நிழலே பாவைக் குயிலே

பிரம்மன் படைப்பே பவளக் கொடியே

கற்பனைத் தேனே கலையெனும் மானே

சிற்பியின் கலையே சிந்தனை உருவே

சொல்லின் எழிலே எழுத்தின் வடிவே

நிலவின் மரூஉவே எந்தன் நினைவே

தரையின் மீனே தங்கச் சிமிழே

எந்தன் மனதின் சொர்ணத் தீவே

கோவையின் கனியே சேரன் மகளே

மணியின் கூட்டே வாழ்க்கையின் துணையே

கைக்கிளையிலே இருக்கின்றேன்

ஐந்திணையாக வருவாயோ?

உயர்திணையாக நானிருப்பேன்

உயிரின் கருவாய் வருவாயோ

என்றெழுதிய தாளில் கீழொரு குறிப்பை

நயமாய் விரித்தேன் நலமெனக் கருதி.

உன்மனம் இதனை ஏற்றது என்றால்

உன்மனம் தொட்டு ஒருமடல் எழுது.

உன்மனம் இதனை ஏற்றிடேல் என்றால்

என்கண் முன்னே கிழித்திடு என்றேன்.

இவ்விதம் அமைத்த மடலை, நானோ

நான்காய் மடித்துப் படிக்கும் ஏட்டில்

பதுங்க வைத்தேன். அன்றிரவு வரை

மறுநாள் விடிந்தது. வாழ்வு மலர

அழகன், திருவடி சென்று வணங்கினேன்.

வாரத்தில் ஒருநாள் நான்விரும்பும் திருநாள்

அந்நாள் வருநாள், வியாழக் கிழமை

இன்றும் எந்நாள் என்ப தாலே

என்னுள்ளம் குளிர்ந்தது. நல்விடை எனக்குக்

கிடைக்கு மென்று அமைதி கொண்டது.

குறித்த நேரம் குறிப்பிட்ட இடத்தில்

எழுதிய மடலோடு அவளின் நினைவோடு

வழுவா நெறியில் இலக்கண மாக

நின்றேன், அவளும் வந்தாள், நின்றாள்.

ஆயிரம் மொழிக்குள் ஒருமொழி யாக

எங்கள் கண்கள் உறவு பேசின

உறவு பேசிய இந்தக் கண்களை

எத்தனை கண்கள் பார்த்தன வென்று

மத்தெனச் சுழலும் கண்களைப் பாராமல்

பித்தென நின்றோம், பேருந்து வந்தது.

எழுதிய மடலை அவளிடம் கொடுக்க

அவளேறிய பேருந்தில் நானும் தொடர

காதல் தேரோ மெல்ல நகர்ந்தது

பேருந்தில் கூட்டம் அதிகம் இருக்க

படியில் நின்று தவித்தேன், பார்த்தன கண்கள்

என்கையி லொருபுத்தகம் தவிப்பதைக் கண்டு

மனமிறங்கிக் கேட்டாள், இதுசமயம் என்றெண்ணி

மடல்வைத்த புத்தகத்தோடு கொடுத்தேன்

என்கரம் பட்ட புத்தகம் அதனை

அவள்கரம் பட்ட தென்னி மகிழ்ந்தேன்.

அவளென் புத்தகத்தை மெல்ல விரித்தாள்.

மெல்லிய ஏடுகளுக் கிடையில் மடலைக்

கண்டாள், நிமிர்ந்து என்னைப் பார்த்தாள்.

அம்மடல் உனக்குத் தானென்றேன்.

மென்விரல் தொட்டு விரித்தாள் மொட்டு

இங்கு,

விரிப்பதை விட்டு பின்விரி யென்று

பாங்காய்ச் சொல்லி இடையில் இறங்கினேன்.

அன்றென் மனமோ ஆனந்தக் களிப்பில்

அலையினும் அதிகமாய் துடித்ததென் இதயம்

கடலினும் பெரிதாய் விரிந்ததென் மனது

உலகிடை உயர்வேன் என்றென நினைத்து

அன்று முழுவதும் உலவிட்டு வந்தேன்.

என்ன பதிலுரைப் பாலோ என்று

என்மனம் ஒருபக்கம் அஞ்ச, மறுபக்கம்

அதுஉனக் கென்று சொல்ல  ஊசலாடியது.

மாலை வந்தது. மாலையானது கண்ணீர்

அவளைக் காணாத கண்ணும் கண்ணோ

என்றெல்லாம் என்மனம் ஏங்க, நினைக்க

மறுமொழி பேச ஆளில் லாததால்

குறுமொழி பேசும் பைத்திய மானேன்.

தனியாய் நின்றேன், தனிமையைக் கொண்டேன்

ஒருநாளே இப்படி யென்றால் வருநாள்

எப்படி இருக்கு மென்று நினைத்தேன்.

மனதினை வேதனை அழுத்த, இதயம்

குறுக, நெஞ்சம் கசிய விட்டநீர்

கண்ணீர் என்று மழையாய் வந்தது.

என்னை மறந்தேன், கடமை துறந்தேன்.

விதியே யென்று விதியைப் பழித்தேன்.

மறுநாள், பேருந்தில் அவளுடன் சென்றேன்.

என்ன பேசுவது, என்ன கேட்பது

எப்படிக் கேட்பது என்ன செய்வது

என்று எண்ணிய எந்தன் மனது

புயலுக்குப் பின்னர் அமைதியைப் போல

எண்ணமெலாம் தீட்டிக் கட்டுரை யாக்கினேன்.

கல்லூரியும் வந்தது,  முதலில் பேச

என்மனக் கல்லொன்று தடை விதித்தது.

பேருந்தை விட்டிறங்கிய உடனே

ஓரடி முன்னே நடந்து செல்ல

என்பைங்கிளி பின்னே தொடர்ந்தாள்.

ஹலோ, என்ற குரலினைக் கேட்டு

திரும்பிப் பார்த்து நடையை நிறுத்தினேன்.

இங்கு எங்கு வந்தீர்கள் என்றாள்.

என்ன விளம்புவ தென்று விளங்காமல்

சிறுவொலி எழுப்பி சும்மா என்றேன்.

பத்தடி சும்மா நடந்த நானே

கேட்டேன், என்மடலுக்கு பதிலென்ன என்றேன்.

விரும்பியதைத் தான்நான் நாடுவேன் என்றாள்.

அப்படி யாயின் என்மடலுக்குப் பதிலோ

நலமெனக் கண்டு வளமாய் ஆனேன்.

என்னையும் அறியா அயலன் மொழியில்

பேசினேன்.  நான்தமிழ் படிக்கிறேன் என்றாள்.

என்மனம் செய்த தவறினை நினைத்து

என்னுள்ளே வதங்கி மன்னிப்புக் கேட்டேன்.

இதுநாட்டு நடப்பென்று மறுத்து உரைத்தாள்.

அன்று, நான்  கொண்ட மகிழ்ச்சி

இனியென்று வரும்? இனிமை தரும்.

கல்லூரி வரையில் நடந்தே சென்றோம்

வழியில் எங்கள் கருத்தினை விரித்து

பழிக்கு ஆகா மனதே, நீதான்

எங்கள் விழிக்கு விளக்கம் என்று

ஒருவர் மனதோ டொருவர் புகுந்தோம்.

மறுவாரம் பொங்கலுக்கு ஊருக்குச் செல்வேன்

என்று பகர்ந்தேன். உங்கள் முகவரி

தாரும் என்று உரிமையோடு கேட்டாள்.

நாளை போடும் கடிதத்திற்கு, இன்று

தேவை உங்கள் முகவரி என்றாள்.

முகவுரை தொடங்க முகவரி கொடுத்தேன்.

அன்றென் மனது கொண்ட மகிழ்ச்சி

வான ளவினும் மிக்கப் பெரியது.

மறுநாள், அவளின் மடலை நோக்கி

மறுநொடி கழிக்கத் துணிவு இல்லாமல்

விறுவிறு வென்று குறுநடை நடந்தேன்.

மாலை வரையில் மடலைக் காணாமல்

மயக்கமாய் நடந்தேன். அவளைக் கேட்டேன்

இங்கு இல்லை ஊருக்கு என்றாள்.

வரும் கடிதம் எடுத்துவை என்று

நண்பனிடம் சொல்லி சென்னையை விட்டேன்.

என்நாடி தோன்றிய ஊரினை அடைந்தேன்.

வரவினை நோக்கா உற்றாரும் பெற்றோரும்

உள்ளம் மகிழ்ந்தனர். உவகை கொண்டனர்.

வறுமையின் விளிம்பில் ஏழையின் குடும்பம்

வதங்கிய தின்று. வாடா மலராய்ப்

புத்தொளி வீசி புதுவெழில் பூண்டு

பூரிப்பின் எல்லையை முகத்தினில் காட்ட

அன்பின் அழைப்பில் அடைக்கலம் புகுந்தேன்.

அன்பு மழையால் நனைத்து விட்டதால்

பனிக்காலக் குளிரில் நடுக்கம் வந்தது.

மறுநாள் தபாலில் உயிரின் உயிலை

எதிர்பார்த்துக் காத்து இருந்தேன். எத்தனையோ

வாழ்த்து மடல்கள் வந்திருந்த போழ்தும்

ஒன்றின் உறைகூட பிரிக்க வில்லை.

அத்தனையும் உறையின்றி வந்த அட்டைகள்.

உறைபோட்ட மடலொன்று உறவுபேச வந்தது

தனியாய் அதனை எடுத்துக் கொண்டு

படிக்கும் அறைக்குப் பக்கம் வந்து

மெல்ல அதன் உறையைக் கிழித்தேன்.

மெய்யுடன் படும் படம் ஒன்றில்

மெய்யான தாளில் மையால் எழுதி

பாங்காய் ஒருவாழ்த்து மடலிருக்கக் கண்டேன்.

பனிமழையில் நனைந்திடக் கூடும் என்று

பளிங்கு பெட்டிக்குள் காத்து வைத்தேன்.

பொங்கல் முடிந்தது, வியாழன் வந்தது

தணிகை முருகன் கண்முன் நிற்க

அவனிடம் சென்று என்னுள்ளம் காட்டி

அடைக்கலம் தாரும், அன்பைப் பொழியும்

நல்வாழ்வைக் காட்டும், அதுஅவளெனச் சொல்லும்

என்று, அவனடி பணிந்து நின்றேன்.

அன்றே வந்தேன். என்னுயிர் தங்கும்

இதய வாசலில் புதுக்கோல மிட்டேன்.

பேருந்தில் தொடர்ந்த எங்கள் காதல்

புயலென மோதும் அலைக்கரை யோரம்

கயமை இலாது பழகி வந்தோம்.

வாரத்தில் இருமுறை வகுப்பறை துறந்தோம்

சிற்சில வாரத்தில் மூன்றுநாளும் துறந்தோம்

வகுப்பறை பாடம் கரையோரம் நடக்கும்

பகுப்பார் இன்றி பழகின தினாலே

தொகுப்பாய் அமர்ந்தோம், ஒழுங்கு காத்தோம்.

கரையோர மணல்கள் கதையைச் சொன்னால்

எங்கள், காதல் கதையைச் சொல்லும்

அலைமோதும் தென்றல் கூட எங்கள்

கலையான காவியக் காதலைக் கூறும்.

கரைதாங்கும் படகின் அரைவட்ட நிழலில்

கலங்கரை விளக்கின் ஒளிமங்கிய வேளையில்

கதிரவன் கதிர்கள் கலந்தாடும் பொழுதினில்

கரைபடாக் காதல் மலர்ந்தது மலரால்.

கட்டிய வளைக்கூடும் கதிரவன் கதிர்களைத்

தன்மேற் கொண்டு நிழலைத் தந்தது.

ஒருகம்பத்து நிழலில், உடலீர் நாங்கள்

ஓருடல் போல ஒன்றி அமர்ந்தோம்.

பகலோன் மேனி அவ்வப் போது

பகையெனத் தீண்ட நிழல்நாடி நகர்வோம்.

காலைக் கதிர்கள் மாலை வரையில்

பொழிவதை, நித்தம் நாங்கள் காண்போம்.

நிழல்சாயும் பக்கமெலாம் நீட்சியேதும் கொள்ளாது

அக்காந்த மலரினைப் போல நாங்கள்

மெல்ல மெல்ல நிழல்நாடி போவோம்.

கடலில் மிதக்கும் தோனி போலே

காதலில் மிதக்கும் நாயகர் களானோம்.

எண்ணங்களை யெல்லாம் ஒன்று திரட்டி

தென்றலைக் கூலிக்கு அழைத்து, சேர்த்து

தெரியாத சுவரொன்று கண்முன் அமைத்து

மறைவினில் இருப்பதாய்க் கற்பனை செய்து

மதிமுகத்தை எந்தன் உதடு மேயும்

மதியிதழ் எந்தன் முகத்தை மேயும்

விரல்கள் தங்கள் உறவு பேசும்.

விழிகள் நோக்கும் பாதை யெல்லாம்

பழியே இல்லா காதல் மக்கள்

கூட்டுற வாலே நாட்டுறவு பேசி

ஒருமைப் பாடே குறிக்கோள் என்று

வறுமைக் கோட்டைத் தாண்டி வந்து

பெருவாழ்வு, வாழ்வதைக் காண்போம்.

ஆங்கே,

ஒருமை நிலைதனை நிலையாய் நாட்டி

ஓருயிர் ஆனது போல மீண்டும்

ஓருடல் ஆக நெருங்கி இணைவோம்.

அவளிதழ் எந்தன் இதழ் கொள்ளும்

அவள்கரம் எந்தன் மேனி கொள்ளும்

என்கரம் உயிரை சேர்த்துப் பிடிக்கும்

இப்படி யெங்கள் இன்ப அலைகள்

திரைக்குள் நடப்பதென்று மறந்து இருந்தோம்.

கரைக் காவலன் ஒருவன் வந்து

வீட்டை இடித்து என்னை இடித்தான்

பொறுமை தன்னைக் கொண்ட தாலே

பெருமையாய் எங்களை வழியனுப்பி வைத்தான்.

படிப்பவன் போலே பாசாங்கு செய்து

தூங்கும் நேரத்தில் விழித்து இருப்பேன்.

அச்சமயம், என்னலைகள் தாளில் வடித்து

சின்னவிழி வரவை நோக்கி இருப்பேன்.

என்விழி நங்கை மூச்சு பட்டு

கண்விழித் தெழுவாள் சன்னலைத் திறப்பாள்.

மென்விரல் கையால் விளக்குப் பொத்தானைக்

கண்ணிமை நேரத்தில் ஒளியை விட்டு

கணிவாய் எனையொரு பார்வை பார்ப்பாள்.

கனிமொழி கதவு திறந்து வரவும்

என்னிதயம் வரைந்த மடல்தனை எடுத்து

மடித்து, ஐவிரல் இடுக்கில் வைத்து

கையுள் வைப்பேன்.  பைங்கிளி அதனைப்

புன்னகை யோடு வாங்கிக் கொண்டு

பொன்மடல் ஒன்று உடனளித்துச் செல்வாள்.

இப்படி யெங்கள் கடிதப் போக்கு

கரையிலா வாழ்வை விளக்கு வதற்கு

நல்லிரவு வேளையில் நலமென நடந்தது

தவறான அவளின் பாதையைச் சொல்லி

வரம்பின்றி பேச்சளந் தார்பேய் பிடித்தார்.

என்னுடன் தங்கும் மனமற்ற நண்பர்கள்

கண்விழித் திருந்து காப்பா ளரிடம்

காட்டிக் கொடுத்தனர். வஞ்சகக் காரர்கள்.

கரம்பற் றியதுநான் என்று உரைத்து

சிரமமில் லாமல் அவர்களை அடைத்தேன்.

திருவீதி அம்மன் கோவில் தன்னில்

தினமும் காலையில் தவறாமல் சந்திப்போம்.

நாட்டுத் திட்டம் தீட்டுவது போல

சந்திக்கும் திட்டங்களை ஆங்கே தீட்டுவோம்.

ஒருநாள், அவளின் மூக்கைத் தொட்டதாலே

மறுநொடி, அவளின் ஐவிரல் எந்தன்

கண்ணத்தில் நயமாய் பதித்து எடுத்தாள்.

அதிலே எனக்கு ஆயிரம் இன்பம்

கரைபுரண்டு, காட்டாற்று வெள்ளம் போல

ஓடினும், ஒருவகை யாய்முகம் வைத்தேன்.

மறுமொழி யாயவள்  மன்னிப்புக் கேட்டாள்.

ஒருநாள், அவளின் தந்தையுடன்

வடபழனி பேருந்து நிலையத்தில் சந்தித்து

அவரின் மனதில் இழையோடும் எண்ணம்

என்ன வென்று எடையிட நினைத்து

வாழையில் ஊசியை ஏற்றினார் போல

மெல்ல மெல்ல பேச்சை வளர்த்து

கலப்புத் திருமணம் என்றெனும் பேச்சை

காரணத் தோடு பேசி வந்தேன்.

அவரின் மனமோ பரந்து இருந்தும்

அரசின் தடைக்கல் தடுப்பாய் உள்ளதே

என்றொரு எண்ணம் அவரின் மனதில்

ஆழமாய், வேரூன்றி யிருக்கக் கண்டேன்.

மறுநாள், கடலலை யருகே சந்தித்தோம்.

நேற்றைய பேச்சில் எந்தன் தந்தை

உந்தன் பேச்சின் சாரம் கண்டு

வாழ்த்திப் போற்றிக் குளிர்ந்தார் என்றாள்.

அன்றே, அவளின் அன்பில் சோதனை

விதையை விதைக்கலா மென்று எண்ணி

என்னுடல் இன்னும் எத்தனை நாட்கள்

என்னுயிர் தாங்கு மென்று தெரியாது

என்றொரு பொய்யை முழுதாய்ச் சொன்னேன்.

என்விழி நங்கை விழியில் அன்று

பொய்யே உண்மை யெனநம்பி வருந்தி

சோதனை யின்யெல்லை சேர்வதைக் கண்டேன்.

இன்னும் அவளைச் சோதிக்க எண்ணி

என்புருக்கி நோய்தான் எனைவந்து கொள்ளும்

என்று சொல்லி பொய்யில் சேர்த்தேன்.

மென்மை, இதயம் வெடித்தது போல

கண்ணிமை நனைந்து, கண்மை கரைந்து

மேனி எங்கும் நனைந்து விட்டாள்.

செய்த சோதனை போது மென்று

சொன்ன பொய்யைப் பொய்யாய் ஆக்கி

பொய்க்குத் தண்டனை நானே ஏற்றேன்.

சொன்னது பொய்யென் றவுட னேயவள்

கண்ணிமை நனைத்த பொன்னிற கண்ணத்தை

என்னதோடு சேர்த்து செவ்விதழ் குவித்து

கணக்கிலா முத்தம் கிடைத்தது எனக்கு.

இப்படியே முத்தம் கிடைக்கு மென்றால்

தினமோர் பொய்யைச் சொல்லி, தித்திக்கும்

உன்னிதழ் முத்தம் பெறுவேன் என்றேன்.

அப்போது பிரிந்த அவளின் இதழோ

எப்போதும் தொடாதே என்று சொன்னாள்.

வழியினைப் பார்த்து விழியினைச் செலுத்தி

வகையீ தென்று அறியாது, ஒருநாள்

பகையாய் நினைத்து வராது விட்டாள்.

அன்று முழுதும் சோர்ந்த உடலோ

சோற்றினை ஏற்காது சோதனை செய்தது

இரண்டு நாளிப்படி சாப்பிடா திருந்தேன்.

பைங்கிளி நெஞ்சு மாற வேண்டி

வடபழனி முருகன் பாதம் வீழ்ந்து

என்மனக் கவலை மாசுகள் நீக்க

கல்மனம் கொண்ட பைங்கிளி நெஞ்சை

நெகிழ வைத்துப் பேச வைப்பாய்

என்றே வணங்கினேன். வரமும் கிடைத்தது.

தினமும் காலையில் கோயில் சென்று

திரும்பும் போது அவளின் தரிசனமும்

கிடைத்த உடனே விடுதி செல்வேன்.

இனிய கனவுகள் பலமுறை கண்டதாய்

கனிய மொழியில் பகர்வாள் பைங்கிளி.

காற்று நுழையாத எங்க ளிருவுடல்

பின்னிப் பிணைந்து இருந்த போதிலும்

இருவுடல் உடைதான் எங்களைக் காத்தது.

பதிவுத் திருமணம் செய்வோ மென்று

பலமுறை யவள்வற் புறுத்திய போழ்தும்

பலமாக எதிர்த்தேன் பெற்றோரை நினைத்து.

அவளின் அவசரம் எனக்குத் தெரியும்.

திருமணம் ஆனால் ஒருமன மாகலாம்

ஒருமனம் ஆனால் ஓருடல் ஆகலாம்

என்றெனக் கருதி, சிந்தித்தப் பின்னே

சிறுதவறு நேர்ந்தால் நிலையிலா நிலையில்

நிலைமை சமாளிக்க முடியா தென்று

எண்ணிப் பார்த்து தவிர்த்து வந்தேன்.

திருமணம் நடப்பின் ஈன்றோம் ஆசியும்

உற்றார் சூழவும் நடைபெறு மென்று

உறுதி கூறி தடுத்து வந்தேன்.

புறவின் பலப்பல களித்து வந்தோம்.

அதிலே எந்தன் உணர்வைத் தீண்டி

அகலின்பம் ஒருநாள் காண உவந்தாள்.

பன்னாள் ஆசை அந்நாள் கொண்டு

சின்னாள் போலே சிதைக்க வந்தாள்.

அன்றே மனதில் வெறுப்பு புகுந்து

நெருப்பாய் என்னை விலக்கிக் கொண்டேன்.

இன்றோடு மாய்ந்தது நம்சந் திப்பென்று

வன்மையாய்க் கூறி விலகிச் சென்றேன்.

இப்படி யெங்கள் காதல் வாழ்க்கை

சிற்றின்ப நிகழ்ச்சிக் குள்முடியு மென்றால்

நினைத்துப் பார்த்தும் இருக்க மாட்டேன்.

சிதறி இன்று போயிருக்க மாட்டேன்.

இடையில் தரகர் பெருகிய தினாலே

இறுதி நிலையில் மாற்றம் கொண்டு

மீண்டும் அவளை காதல் கொள்ள

நடையில் சிறிது தளர்ச்சி பெற்றேன்.

மனம் திருந்தி நற்குண மாகி

பக்கம் வந்தால் போது மென்று

எக்காலமும் நினைவில் வாழத் துணிந்தேன்.

ஒருநாள்,

தேர்வினை எழுதப் பைங்கிளி சென்றாள்

நானும் அவளைத் தொடர்ந்து சென்றேன்.

உடன்சோ தரிவருவாள் என்று தடுத்தாள்.

சோதரி யல்ல மச்சி யென்று

சோகமாய், சாடையில் செப்பி விட்டு

தனியாய் விட்டுச் சென்று விட்டாள்.

தேர்வினை நன்கு எழுத வேண்டி

என்மனம் கொண்ட இறைவன் ஒருவன்

முருகன் பெயரைச் சொல்லிச் சொல்லி

உருகி வேண்டி, தாளில் அவன்பெயர்

ஆயிரத் தெட்டு முறையெழுதி வந்தேன்.

இன்று அவள்தேறி விட்டாள், என்னைப்

பிரிந்து வேறொரு நபரை ஏற்றதால்

என்மீது கோபக் கனலை கக்க

அனலிடை விழுந்த புழுவாய்த் துடித்தேன்.

மனங்கொண்ட மடலொன்று வடித்து அனுப்புவேன்

பதிலைப் பக்கத்துச் சன்னல் வழியே

எனைவிட்டு எரிந்தது போல அதையும்

என்மீ தெரிவதாக வீதியில் வீசுவாள்.

அன்பில் உதைத்தால் வெறுப்பார் உண்டோ?

என்றே, எண்ணி முத்தமிட்டு எடுத்தேன்.

ஏக்கம் போக்கும் மருந்தாகு மென்று

ஏணிமேல், எண்ணம் ஏறிச் செல்லும்

விரித்ததும் வசைமொழி பலப்பல கண்டு

வழுக்கி விழுந்து எழநான் தவிப்பேன்.

அதைக் கண்டவள்மனம் துள்ளுமோ? இல்லை

அலையுமோ என்றுகாண சன்னலைப் பார்ப்பேன்

கவலை இருந்தால் வந்து இருப்பாள்.

வேறொரு காதலை நாடியவள், என்னை

கைவிட்ட பின்பு நானா காதலன்?

கையில்பட்ட நீரும் உலர்வது போல

என்மனம் கொண்டவள் நினைத்து விட்டாள்.

இடையைக் கொண்டவன் சிதைத்து விட்டு

சிந்தைத் தெளியும் முன்னே தெறிக்கவிட்டு

வாழ்க்கை சிதறி வழக்கை மறந்து

நெறிதவற, விட்டவாழ்வை எண்ணி வருந்தினாள்.

முறியாத முதல்காதல் முழுதாய் எண்ணி

நிலவைக் காணாது மாதம் ஒருமுறை

வானம் தவிப்பது போல ஈங்கு

நிலவும் மனங்கள் தவிப்ப துண்டு.

நானோ, நிலவு முகத்தைக் காணாது

மாதம் முழுவதும் தவித்து இருந்தேன்.

மாத மல்ல இனிவருடம் கூட

காத்திருக்கத் துணிந்து விட்டேன்.

கோடை விடுமுறை கோரமாய் என்னை

நோயில் படுக்க வைத்தது.  அச்சமயம்

என்கிளி மொழிந்த மடலொன்று வந்தது.

எந்தையும் தாயும் படித்து விட்டு

எங்கோ அதனை வைத்து விட்டார்.

மடலும் காணாது அவளையும் மறவாது

உடலும் உள்ளமும் உருகி வந்தது.

ஒருநாள் என்கிளி மடலைக் கண்டு

பரவசம் கொண்டு புத்துயிர் பெற்றேன்.

இதற்கிடை எத்தனை மடல்கள் வரைந்தும்

அத்தனையும் அவள் கையுறை பெறாமல்

எந்தையே யதனைத் தடுத்து விட்டார்.

எல்லாம் பிறகு தெரிந்த பின்னர்

என்மன நிலையை வெளியேற்றி விட்டேன்

மறுப்புரை அளித்த எந்தை உடனே

இசைப்புரை வழங்கி இனிமை தந்தார்

ஒருமுறை அவளைக் காண ஒருநாள்

திருநாள் அன்று கண்டு சென்றார்

என்விழிப் பாதை நேரா னதுமே

அவளின் பாதையில் மாற்ற மானது.

அந்நாள் தொடர்ந்து இந்நாள் வரையில்

அவளின் நினைவே கனவில் வந்து

இவனின் உயிரை வாழ வைக்கிறது.

அவளைக் கண்டு நாட்கள் ஆனாலும்

அவளின் நினைவு எந்தன் மனதில்

உருவம் அழியா ஓவியம் போல

நிலைத்து நின்று நித்தம் காண்கிறேன்.

புண்ணிய பூமியில் புதுமைகள் ஆயிரம்

பண்ணிய போழ்தும் எண்ணிய தெல்லாம்

நடந்ததா என்றால்?  நடவாத பகுதி

நாட்டினில் ஏராளம், வாழ்வினில் தாராளம்.

அற்றை நாள்முதலாய் வளர்ந்த காதல்

இற்றை நாளில் சுவடே தெரியாமல்

மறைத்து இருப்பதை எண்ணிப் பார்த்து

மறதிவரா மனதுக்கு நன்றி கூறி

மகிழ்வுடன் இயங்கு கின்றேன் இவ்வுலகில்.

நிலவிறங்கி எனைவந்து முத்தம் இட்டாலும்

நினைவதை மறவாத எந்தன் நெஞ்சில்

சிறிதேனும் சஞ்சம் ஏற்பட்டதே இல்லை.

ஆயின், என்நிலாமுகம் எனக்கிட்ட முத்தத்தை

எண்ணி எண்ணி அகமொடு மகிழ்கின்றேன்.

இப்படி யெங்கள் காதல் வாழ்வில்

இடையில் மறைத்து, இடையே மறந்து

வாழ்ந்து வருகிறேன். இடையில் விட்ட

இவனின் நிலையை எண்ணிப் பார்த்து

இளகி வந்தாள் இவனின் இதய

இனிய வாசல் திறந்தே இருக்கும்

அதுவரை, இவ்வாசல் பூட்டா திருக்கும்.

 

 

Comments

Popular posts from this blog

அக்னிப்பூ